புதிய அரசு கட்டிடங்கள்
நாகை மாவட்டத்தில் புதிய அரசு கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
நாகை மாவட்டத்தில் புதிய அரசு கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
திறப்பு விழா
நாகை மாவட்டத்தில் புதிய அரசு கட்டிடங்களின் திறப்பு விழா நடந்தது.
விழாவுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார்.
விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் மெய்யநாதன், நாகை அருகே சவேரியார்கோயில் தெருவில் ரூ.11 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், அந்தணப்பேட்டையில் ரூ.23 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம், ரூ.14 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை, ஆழியூரில் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பெண்களுக்கு உரிமை தொகை
ஏழை, எளிய மக்கள் அனைவரும் பயன் பெற வேண்டும் என்ற நோக்குடன் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனமாக இருக்கிறார். இதற்காக இரவு, பகலாக உழைத்து வருகிறார்.
இந்த 2 ஆண்டு கால சாதனையில் விவசாயத்திற்கு தனி பெட்ஜெட், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பெண்கள் பயணம் செய்ய இலவச பஸ், கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மை காவலர்களுக்கு ஊதியம் உயர்வு என சொல்லி கொண்டே போகலாம். இதையும் தாண்டி வரும் செப்டம்பர் மாதம் முதல் 1 கோடி பெண்களுக்கு உரிமை தொகை வழங்கப்படவுள்ளது.
விவசாயத்திற்கு முன்னுரிமை
கொரோனா காலத்தில் அனைத்து தொழில்களும் முடங்கிய போது விவசாயம், காவல்துறை, மருத்துவத்துறை மட்டுமே இயங்கியது. முதல்-அமைச்சர் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்த காரணத்தால் உணவு உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறோம்.
தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதால் உலக முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க தமிழ்நாட்டை நோக்கி வருகின்றனர். அடித்தட்டு மக்களுக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதில் கவனமுடன் செயல்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்கம் நாம் அனைவரும் நிற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில். முகமதுஷாநவாஸ் எம்.எல்.ஏ., நாகை ஊராட்சி ஒன்றிய தலைவர் அனுசியா, கூடுதல் கலெக்டர் பிரித்விராஜ், வட்டார வளர்ச்சி அலுவலகர்கள் பாலமுருகன், ரேவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.