காதல் மனைவி சேர்ந்து வாழாததால் புதுமாப்பிள்ளை தற்கொலை


காதல் மனைவி சேர்ந்து வாழாததால் புதுமாப்பிள்ளை தற்கொலை
x

காதல் மனைவி சேர்ந்த வாழ வராததால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

தூக்குப்போட்டு தற்கொலை

பெரம்பலூர் அருகே எளம்பலூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் லெனின். இவர் திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையில் மின்சார துறையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இந்திரா காந்தி என்ற மனைவியும், அனுபல்லவி என்ற மகளும், பார்த்திபன் (வயது 26) என்ற மகனும் இருந்தனர். பார்த்திபன் எளம்பலூர் கிராம ஊராட்சியில் தூய்மை பணியாளராக கடந்த 1 மாதமாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்க சென்ற பார்த்திபன் நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டின் முன்பு உள்ள ஆஸ்பெடாஸ் மேற்கூரை கம்பியில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதனை கண்ட அவரது பெற்றோர் பார்த்திபனின் உடலை பிடித்தவாறு கதறி அழுதனர்.

காதல் திருமணம்

இதுகுறித்து அக்கம், பக்கத்தினர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து பார்த்திபனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பார்த்திபனின் தந்தை லெனின் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இறந்த பார்த்திபன் லாடபுரத்தை சேர்ந்த ராமரின் மகள் ஞானவிழி (24) என்பவரை காதலித்தார். இருவரும் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து கடந்த மாதம் 10-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பார்த்திபனை விட்டு ஞானவிழி பிரிந்து சென்று விட்டார். இதனால் ஞானவிழியை காணவில்லை என்று பார்த்திபன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானவிழியை தேடி வந்தனர்.

சேர்ந்து வாழ வராததால்...

இந்த நிலையில் லாடபுரத்தில் பெற்றோர் வீட்டில் இருந்த ஞானவிழியை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஞானவிழி தான் பெற்றோருடன் செல்வதாகவும், பார்த்திபனுடன் வாழ விரும்பவில்லை என்று கூறிவிட்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஞானவிழி பார்த்திபனுக்கு போன் செய்து மதியம் 2 மணிக்கு வந்து விடுகிறேன். இருவரும் சேர்ந்து வாழலாம் என கூறியதாக தெரிகிறது.

ஆனால் ஞானவிழி வராததால் பார்த்திபன் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

காதல் மனைவி சேர்ந்த வாழ வராததால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதல் மனைவி சேர்ந்த வாழ வராததால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.

இறந்த பார்த்திபனின் சட்டை பையில் இருந்து உருக்கமாக எழுதப்பட்டிருந்த ஒரு கடிதம் போலீசார் கையில் சிக்கியது. அதில், தனது சாவுக்கு காரணம் தனது மாமா ராமர், அத்தை மற்றும் காதலி ஞானவிழி ஆகிய மூவரும் தான் என்று எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story