'ஆன்லைன்' ரம்மியை தடை செய்ய விரைவில் புதிய சட்டம்
தமிழ்நாட்டில் ‘ஆன்லைன்’ ரம்மியை தடை செய்ய விரைவில் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. இருக்கும் இடம் தெரியாமல் படுத்துவிட்டது. எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்று சசிகலா சொன்னவுடன், 'ஏதோ எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போகிறார்' என்பது போல, தான் இருப்பதை காட்டிக்கொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு (நேற்று) அளித்த பேட்டியில், தமிழக அரசு மீது அவதூறுகளை அள்ளி வீசுவதற்கு முற்பட்டிருக்கிறார்.
சட்டம்-ஒழுங்கு சிறப்பு
இந்த ஓராண்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை அறிவித்திருக்கிறார். ஆனால் பூனை கட்டிக்கொண்டால் உலகமே இருட்டு என்று சொல்வதை போல, தமிழ்நாட்டில் எந்த நல்லதும் நடைபெறவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று சொல்லி இருக்கிறார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உருக்குலைந்து இருந்த சட்டம்-ஒழுங்கை இன்றைக்கு முழுமையாக சீர்படுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பேணிக்காத்து வருகிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் சாதி சண்டை, மத கலவரம் இல்லை. மிக அமைதியான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் கடைசி ஓராண்டில் 1,695 கொலைகள் நடந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் 1,588 கொலைகள் மட்டும்தான் நடந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் 146 கொள்ளை சம்பவங்களும், தி.மு.க. ஆட்சியில் 103 கொள்ளை சம்பவங்களும் நடந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் கூலிப்படை கொலைகள் 30-ம், தி.மு.க. ஆட்சியில் வெறும் 18-ம் தான் நடந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியின் கடைசி 2 ஆண்டுகளில் 16 முறை போலீஸ் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் இல்லவே இல்லை.
'ஆன்லைன்' ரம்மி தடைக்கு சட்டம்
அ.தி.மு.க. ஆட்சியில் 'ஆன்லைன்' ரம்மி விளையாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது போலவும், தி.மு.க. ஆட்சியில் 'ஆன்லைன்' ரம்மி சூதாட்டம் கொடிக்கட்டி பறப்பது போன்றும் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குவதற்கு எடப்பாடி பழனிசாமி முயன்றிருக்கிறார்.
தி.மு.க.வை பொறுத்தவரையில் 'ஆன்லைன்' ரம்மி சூதாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறோம். அவர்களை போன்று அவசர கோலத்தில் சட்டத்தை இயற்றாமல் சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி, உரிய திருத்தங்களுடன் சட்டத்தின் முன்பு நிலைநிறுத்தக்கூடிய வகையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மிக விரைவில் அந்த சட்டங்கள் கொண்டு வரப்படும்.
தி.மு.க. ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக சொல்லி இருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில் குட்கா எந்தளவுக்கு இருந்தது என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். தி.மு.க. ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் 90 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 496 வழக்குகளில் தொடர்புடைய 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
மாநில உரிமைக்காக...
பிரதமர் இங்கு வந்த போது நமது கோரிக்கைகளை மனுவாக கொடுத்திருக்க வேண்டும். அவர் முன்பு இதையெல்லாம் பேசியிருக்கக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். ஏற்கனவே பிரதமரிடம் என்னென்ன கோரிக்கைகள் மனுவாக அளிக்கப்பட்டு இருந்ததோ, அதை மாநிலத்தின் உரிமைக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். இவரை போன்று யாரிடத்திலேயும் மண்டியிட வேண்டிய அவசியம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை.
ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா ஆகியோர் மனுதான் கொடுத்தார்கள் என்று அவர்கள் மீதும் மாசினை கற்பிக்க கூடிய வகையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்திருக்கிறார். தி.மு.க. அரசு இன்றைக்கு மக்கள் நலனுக்காக பாடுபடுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக உழைக்கிறார். களத்தில் நின்று பாடுபடுகிறார். இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் மக்களால் நிராகரிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி விரக்தியில் தி.மு.க. ஆட்சி மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.