புத்தகங்கள் படித்தால் சாதனையாளராக மாறலாம்- முதன்மை கல்வி அதிகாரி
வலங்கைமானில் உள்ள அரசு பள்ளியில் நூலகத்தை திறந்து வைத்த முதன்மை கல்வி அதிகாரி தியாகராஜன், புத்தகங்கள் படித்தால் சாதனையாளராக மாறலாம் என கூறினார்.
வலங்கைமானில் உள்ள அரசு பள்ளியில் நூலகத்தை திறந்து வைத்த முதன்மை கல்வி அதிகாரி தியாகராஜன், புத்தகங்கள் படித்தால் சாதனையாளராக மாறலாம் என கூறினார்.
அரசு பள்ளி
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்ளும் வகையில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 3 ஆயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
நூலகத்தை திருவாரூர் முதன்மை கல்வி அதிகாரி தியாகராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்வதற்கும், போட்டித் தேர்வுகளை சிறப்பாக எதிர்கொள்ளவும் நூலகத்தை தினமும் ஒரு மணி நேரம் பயன்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை, மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே கால அட்டவணையில், ஒரு பாடவேளையை நூலகத்திற்காக ஒதுக்கி உள்ளது.
சாதனையாளர்களாக மாறலாம்
வாரம் ஒரு முறையாவது மாணவர்கள் புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்த வேண்டும். நூலகத்தை பயன்படுத்தி புத்தகங்களை படித்தால் பொது தகவல்களை அறிந்து கொள்வதுடன், சிந்தனை மேம்பட்டு, சாதனையாளர்களாக மாறலாம்.
ஒவ்வொரு மாணவனும் படைப்பாளியாக உருவாக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மாதவன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுமத்ரா, பெற்றோர்ஆசிரியர் கழக தலைவர் செல்வம், தலைமை ஆசிரியர் தெய்வ பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.