நடைபாதை இல்லாமல் கட்டப்பட்ட புதிய ரெயில்வே மேம்பாலங்கள்
திண்டுக்கல் நடைபாதை இல்லாமல் புதிய ரெயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
ஒவ்வொரு உயிரினமும் தனது தேவை கருதி பயணித்து கொண்டே இருப்பது இயல்பு. உணவு, வேலை, உறைவிடம் என அந்த தேவைகளின் பட்டியல் வெவ்வேறாக இருக்கிறது. தேவை எதுவென்றாலும் பயணம் செல்வது தவிர்க்க முடியாததாகி விட்டது.
பயணம்
உலகில் வாழும் நாட்களில் பயணத்துக்கு நாம் பெரும் பகுதியை செலவு செய்து விடுகிறோம். பூச்சிகள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள் என ஒவ்வொரு உயிரினத்தின் பயணமும் மாறுபட்டவை. அந்த பயணம் இனிதாக அமைய செல்லும் பாதை சரியாக இருக்க வேண்டும்.
இதில் ஒற்றையடி பாதை, வண்டிப்பாதை, சாலை, ரெயில் பாதை என மனிதன் பயணிக்க பல பாதைகள் இருக்கின்றன. இந்த பாதைகள் தனித்தனியாக செல்லும் வரை பயணத்துக்கு பிரச்சினை இல்லை. ஒரு பாதை மற்றொன்றுடன் குறுக்கிட்டால் இடையூறுகளும் தானாக வந்து விடுகின்றன.
ரெயில் பாதை- சாலை
மனிதன் நினைத்த நேரத்தில் செல்வதற்கு வாகன வசதி இருக்கிறது. ஆனால் குடும்பத்துடன் நீண்ட தூரம் செல்வதற்கு ரெயில் தான் மிகவும் வசதியானது. எனவே மக்களின் தேவைக்காக ரெயில் சேவைகள் விரிவுபடுத்தப்படுகின்றன. இதனால் ரெயில் பாதைகளும், சாலைகளும் சந்திப்பதை தவிர்க்க முடியவில்லை என்றே கூறலாம்.
நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களில் கூட சாலைகளுக்கு குறுக்கே ரெயில் பாதைகள் செல்கின்றன. இவ்வாறு சாலையும், ரெயில் பாதைகளும் சந்திக்கும் பகுதியில் வாகன போக்குவரத்து குறைவாக இருந்தால் அங்கு ரெயில்வே கேட் மட்டுமே அமைக்கப்படுகிறது. ரெயில் செல்லும் நேரங்களில் கேட் மூடப்பட்டு பின்னர் திறக்கப்படும்.
ரெயில்வே மேம்பாலம்
அதுவரை வாகனங்களில் மக்கள் காத்திருக்கும் தர்மசங்கடமான நிலை ஏற்படுகிறது. அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு ரெயில்வே கேட்கள் அனைத்தும் சுரங்கப்பாதை, ரெயில்வே மேம்பாலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
அதில் வாகன போக்குவரத்து அதிகமுள்ள பகுதிகளில் ரெயில்வே மேம்பாலமும், சுமாரான போக்குவரத்து மிகுந்த இடங்களில் சுரங்கப்பாதையும் அமைக்கப்படுகிறது. இதில் ரெயில்வே சுரங்கப்பாதைகளை பொறுத்தவரை மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதால் பெரும் இடையூறு ஏற்படுகிறது. வாகனங்களில் செல்வோர் மட்டுமின்றி பாதசாரிகள் கூட சிரமப்படுவார்கள்.
நடைபாதை
ஆனால் ரெயில்வே மேம்பாலம் என்றால் எந்தவித இடையூறும் இல்லாமல் வாகனங்கள் இயல்பாக செல்ல முடியும். மேலும் பாதசாரிகள் செல்வதற்கு வசதியாக மேம்பாலத்தின் இருபக்கங்களிலும் நடைபாதைகள் அமைக்கப்படுகின்றன. அதில் பாதசாரிகள் எளிதாக மேம்பாலத்தை கடந்து செல்லலாம்.
இந்த நடைபாதை அமைப்பதால் பாதசாரிகளால் வாகனங்களுக்கோ அல்லது வாகனங்களால் பாதசாரிகளுக்கோ இடையூறு ஏற்படுவது இல்லை. எனவே ஒவ்வொரு ரெயில்வே மேம்பாலத்திலும் நடைபாதைகளை அமைத்து கட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் நாகல்நகரில் அமைந்துள்ள ரெயில்வே மேம்பாலமே அதற்கு சிறந்த உதாரணம் ஆகும்.
நடைபாதை இல்லாத மேம்பாலம்
இந்தநிலையில் திண்டுக்கல்லில் கடந்த சில ஆண்டுகளாக புதிதாக கட்டப்படும் ரெயில்வே மேம்பாலங்களில் நடைபாதை வசதி இல்லாமலேயே கட்டப்படுகின்றன. திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலையில் எம்.வி.எம். அரசு பெண்கள் கல்லூரி அருகே கட்டப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலம், நேருஜிநகரில் திருச்சி சாலையில் அமைந்துள்ள ரெயில்வே மேம்பாலம், பாலகிருஷ்ணாபுரம் ரெயில்வே மேம்பாலம் உள்பட மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட பல ரெயில்வே மேம்பாலங்களில் நடைபாதை இல்லை.
இந்த ரெயில்வே மேம்பாலங்கள் அனைத்தும் தண்டவாளங்களுக்கு மேலே தான் கட்டப்பட்டு இருக்கின்றன. வாகனங்கள் செல்வதற்கு மட்டுமே ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது போன்று இருக்கிறது. இந்த பாலங்களின் பக்கவாட்டில் சுமார் 3 அடி அகலத்தில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு பாதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
பாதசாரிகள் பரிதவிப்பு
அதில் தான் பாதசாரிகள் நடந்து செல்ல வேண்டியது இருக்கிறது. மேம்பாலத்தில் போட்டி போட்டு செல்லும் இருசக்கர வாகனங்கள், மின்னல்வேகத்தில் முந்தி செல்லும் கார்களுக்கு நடுவே பாதசாரிகள் நிம்மதியாக நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
இதனால் வேறுவழியின்றி ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அமைந்துள்ள தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக ஒருசில நேரம் ரெயிலில் அடிபட்டு மக்கள் இறக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. எனவே ரெயில்வே மேம்பாலங்களில் பாதசாரிகளுக்கும் தனியாக நடைபாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.