பழனி முருகன் கோவிலில் ரோப்காரை இயக்க புதிய 'சாப்ட்டு'
பழனி முருகன் கோவிலில் ரோப்காரை இயக்க கொல்கத்தாவில் இருந்து புதிய ‘சாப்ட்டு' கொண்டு வரப்பட்டது.
பராமரிப்பு பணி
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதானமாக உள்ளன.
மேலும் பக்தர்கள் எளிதில் சென்று வருவதற்காக ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. இதில், விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்ல முடிவதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் சேவையை விரும்புகின்றனர்.
இந்த ரோப்காரில் தினமும் ஒரு மணி நேரம், மாதத்துக்கு ஒரு நாள் மற்றும் வருடத்துக்கு ஒரு மாதம் என பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான வருடாந்திர பராமரிப்பு பணி கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கியது. அதையொட்டி ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ரோப்கார் நிலையத்தில் உள்ள பெட்டிகள் மற்றும் கம்பிவடம் கழற்றப்பட்டன. பின்னர் ரோப்காரின் சாப்ட், கம்பி வடம் உள்ளிட்டவைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டது. இதில் 'சாப்ட்'டில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
புதிய 'சாப்ட்டு'
எனவே ரோப்கார் சேவைக்காக புதிய 'சாப்ட்டு' வாங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கொல்கத்தாவில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான புதிய 'சாப்ட்டு' வரவழைக்கப்பட்டது. பின்னர் அதன் உறுதி தன்மையை பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். அதையடுத்து புதிய 'சாப்ட்டு' ரோப்காரில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறும்போது, ரோப்காரில் புதிய 'சாப்ட்டு' மாற்றப்பட்டு பிற உபகரணங்கள் பொருத்தப்பட உள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்த பின்பு சோதனை ஓட்டம் நடைபெறும். அதன்பிறகு பக்தர்கள் பயன்பாட்டுக்கான சேவை தொடங்கும் என்றனர்.