ரூ.393 கோடி செலவில் கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பஸ்நிலையம்; அடுத்த மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்


ரூ.393 கோடி செலவில் கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பஸ்நிலையம்; அடுத்த மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
x

ரூ.393 கோடி செலவில் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய புறநகர் பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் 15-ந் தேதி திறந்து வைக்கிறார்.

சென்னை

கிளாம்பாக்கம் பஸ் நிலையம்

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டுவதற்கு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அ.தி.மு.க. ஆட்சியின்போது அடிக்கல் நாட்டப்பட்டது.இதற்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு பஸ்நிலைய கட்டுமான பணிக்காக ரூ.393.74 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி நடந்து வந்தது.கொரோனா காரணமாக கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக கட்டுமான பணிகள் வேகமாக நடந்தன.

நவீன வசதிகளுடன் கட்டுமானம்

தினந்தோறும் ரூ.1½ லட்சம் பயணிகள் பயன்படுத்தும் வகையில் இந்த புதிய பஸ்நிலையம் அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.ஒரே நேரத்தில் 209 பஸ்கள், 270 கார்கள் மற்றும் 3 ஆயிரத்து 500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதிய பஸ்நிலையத்துக்கு வந்து செல்லும் வகையில் மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்காக பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ரெயில் நிலையத்தை இணைக்க ஆலோசனை

சூரிய மின் தகடுகள் பொருத்தி மின்சாரம் பெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் காத்திருக்கும் இடம், தங்குமிடம் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள், மழைநீர் சேகரிப்பு திட்டம் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.புறநகர் ரெயிலில் வரும் பயணிகள், கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்துக்கு எளிதாக செல்லும் வகையில் வண்டலூர் ரெயில் நிலையத்தை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதைத்தொடர்ந்து கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து வண்டலூர் புறநகர் ரெயில் நிலையம் செல்வதற்கு வசதியாக 'ஸ்கைவாக்' பாலம் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த மாதம் திறப்பு

புதிய பஸ் நிலையத்தில் தற்போது 98 சதவீத கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. வண்ணப்பூச்சு, அலங்கார வேலை, மின்சார வசதி, குடிநீர் வசதி போன்ற சில பணிகள் மட்டுமே முடிவடைய வேண்டியது உள்ளது.இந்த பணிகளை இன்னும் 2 வாரத்துக்குள் முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே புதிய பஸ்நிலையத்தை திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வந்தனர். ஆனால், பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டதால் அடுத்த மாதம் (பிப்ரவரி) 15-ந் தேதி திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய பஸ் நிலையத்தை திறந்து வைக்க உள்ளார். திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story