புதிய தார் சாலைகள், பள்ளி கட்டிடங்கள் கட்டி தர வேண்டும்-ஒன்றிய கவுன்சிலர் அருணாச்சலம் கோரிக்கை


புதிய தார் சாலைகள், பள்ளி கட்டிடங்கள் கட்டி தர வேண்டும்-ஒன்றிய கவுன்சிலர் அருணாச்சலம் கோரிக்கை
x

டி.நாகனி, குஞ்சங்குளம், சிறுமலைக்கோட்டை, ஒரிக்கோட்டை ஊராட்சிகளில் புதிய தார் சாலைகள், பள்ளி கட்டிடங்கள் கட்டி தர வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர் ரா.அருணாச்சலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம்

தொண்டி,

டி.நாகனி, குஞ்சங்குளம், சிறுமலைக்கோட்டை, ஒரிக்கோட்டை ஊராட்சிகளில் புதிய தார் சாலைகள், பள்ளி கட்டிடங்கள் கட்டி தர வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர் ரா.அருணாச்சலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

5-வது வார்டு கவுன்சிலர்

திருவாடானை ஊராட்சி ஒன்றியம் டி.நாகனி, குஞ்சங்குளம், சிறுமலைக்கோட்டை, ஒரிக்கோட்டை ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய 5-வது வார்டு கவுன்சில் தேர்தலில் தி.மு.க. சார்பில் ஒன்றிய கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரா.அருணாச்சலம். இவர் ஒன்றிய கவுன்சிலராக பொறுப்பேற்றதை தொடர்ந்து தனது கவுன்சிலுக்கு உட்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறார். இது குறித்து ஒன்றிய கவுன்சிலர் ரா. அருணாச்சலம் கூறியதாவது:-

குஞ்சங்குளம் ஊராட்சி தினைக்காத்தான் வயல் கிராமத்தில் ரூ.4½ லட்சத்தில் பேவர் பிளாக் சாலை, கல்லறை குடியிருப்பு கிராமத்தில் ஊருணியில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. சிறுமலைக்கோட்டை கிராமத்தில் புதிய குடிநீர் குழாய் இணைப்பு, தினைக்காத்தான் வயல் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு புதிய குடிநீர் குழாய் இணைப்பு அமைக்கப்பட்டுள்ளது. அல்லிக்கோட்டை முதல் டி.நாகனி வரை புதிய குடிநீர் குழாய் இணைப்பு அமைக்கப்பட உள்ளது.

புதிய தார்ச்சாலை

சிறுமலைக்கோட்டை அய்யனார் கோவிலுக்கு பேவர்பிளாக் சாலை, ஒரிக்கோட்டை நல்லாத்துரை கோவிலுக்கு தார் சாலை அமைக்கப்பட உள்ளது. அல்லிக்கோட்டை முதல் நாச்சியேந்தல் வழியாக நெய்வயல் செல்லும் சாலை மராமத்து செய்யப்பட உள்ளது. குஞ்சங்குளம் ஊராட்சி கல்லறை குடியிருப்பு செல்லும் சாலை, தினைக்காத்தான் வயல் ஒமங்காடு சாலை, கீழக்கோட்டை, மாவிலங்கை, கிராம சாலைகள், ஒரிக்கோட்டை ஊராட்சி, சின்ன ஒரிக்கோட்டை செல்லும் சாலையை புதிய தார் சாலையாக அமைக்க வேண்டும். சிறுமலைக்கோட்டை ஊராட்சியில் விருசுழி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட வேண்டும். சிறுமலைக்கோட்டை ஊராட்சியில் கீழக்கோட்டை, செட்டியேந்தல் கிராம சாலைகள் தார் சாலைகளாக அமைக்க வேண்டும்.

டி. நாகனி ஊராட்சியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி புதிதாக கட்ட வேண்டும். ஆதியாகுடி வழியாக கோவணி செல்லும் சாலை தார்சாலையாக அமைக்க வேண்டும். அல்லிக்கோட்டை ஆதிதிராவிடர் காலனி முதல் அதங்குடி வரை உள்ள சாலை யூனியன் சாலையாக இருந்து வருகிறது. இச்சாலையை நெடுஞ்சாலை துறைக்கு மாற்ற வேண்டும். இளங்குன்றம் கிராமத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்ட நிலையில் புதிதாக பள்ளி கட்டிடத்தை உடனடியாக கட்டித் தர வேண்டும். டி.நாகனியில் அரசு கால்நடை கிளை மருந்தகம், சிறுமலைக்கோட்டை, டி.நாகனி கிராமங்களில் புதிதாக ரேஷன் கடை கட்டிடங்கள் கட்டித் தர வேண்டும்.

புதிய பயணிகள் நிழற்குடை

அல்லிகோட்டை ஆதிதிராவிடர் காலனி மற்றும் பாண்டி முனீஸ்வரர் கோவில் அருகில், இளங்குன்றம் ரைஸ் மில் அருகில், குஞ்சங்குளம் பஸ் நிறுத்தம் அருகில் ஆகிய இடங்களில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும். சிறுமலைக்கோட்டை கோட்டை அம்மன் கோவில் வழியாக அல்லிகோட்டை வரை செல்லும் மெட்டல் சாலையை புதிய தார்சாலையாக அமைத்து தர வேண்டும். குஞ்சங்குளம் கல்லறை குடியிருப்பு பகுதிகளுக்கு தனியாக புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும்.

சிறுமலைக்கோட்டை, டி.நாகனி, குஞ்சங்குளம் கிராமங்களில் புதிதாக குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட வேண்டும் உள்ளிட்ட மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என திருவாடானை யூனியன் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வலியுறுத்தி வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story