ஜோலார்பேட்டை பகுதியில் ரூ.1 கோடியில் புதிய டிரான்ஸ்பார்மர்
ஜோலார்பேட்டை பகுதியில் ரூ.1 கோடியில் புதிய டிரான்ஸ்பார்மரை தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சியில் உள்ள 18 வார்டு பகுதி மற்றும் ஊராட்சி பகுதிகளில் 24 மணி நேர மும்முனை மின்சாரம் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனால் துணை மின் நிலையம் அமைத்து சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பொட்டிக்கான்பள்ளம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது. இது நகராட்சி மேற்கு பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. கிழக்குப் பகுதி பொதுமக்களுக்கு மும்முனை மின்சாரம் கிடைக்கவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தேவராஜி எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் கிழக்கு-மேற்கு பகுதிக்கு இடைப்பட்ட ஜோலார்பேட்டை ரெயில்வே இருப்பு பாதையை கடந்து பூமிக்கு அடியில் புதைவட மின்பாதை அமைக்க ரெயில்வே துறையினரிடம் அனுமதி பெற்று ரூ.1 கோடியே 2 லட்சத்தில் பார்சம்பேட்டை ரெயில்வே தண்டவாள பகுதியில் 200 மீட்டர் தொலைவிற்கு மூன்று மீட்டர் ஆழத்தில் புதைவட மின்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
மேலும் சக்கரக்குப்பம் மற்றும் ரெட்டியூர் பீடர் பகுதியில் புதைவட மின்பாதை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு தமிழ் புத்தாண்டை யொட்டி சக்கரக்குப்பம், ரெட்டியூர் ஆகிய 2 மின்பாதையில் உள்ள சீரான மின்சார வினனியோக தொடக்க விழா நடைபெற்றது. க.தேவராஜி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, 2 மின்பாதையில் டிரான்ஸ்பார்மரை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வாணியம்பாடி செயற்பொறியாளர் அ.பாஷாமுகமது, நகர செயலாளர் ம.அன்பழகன், நகரமன்ற தலைவர் காவியா விக்டர், துணைத்தலைவர் இந்திரா பெரியார்தாசன், உதவி செயற் பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் கோமதி, முன்னாள் நகரமன்ற துணைத் தலைவர் சி.எஸ்.பெரியார்தாசன் உள்பட மின்வாரிய அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.