புதிய வகை கொரோனா அச்சம்: தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்


புதிய வகை கொரோனா அச்சம்: தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டும் மக்கள்
x

புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு மீண்டும் மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கின்றனர்.

மதுரை


புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு மீண்டும் மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கின்றனர்.

புதிய வகை கொரோனா

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் தற்போது 'பிஎப்.7' எனப்படும் புதிய வகை உருமாறிய கொரோனா மக்களை ஆட்டிப்படைக்கிறது. சீனாவில் பெரும் அச்சுறுத்தலாக உருவாகி இருக்கும் இந்த வகை கொரோனா அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகளிலும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பி.எப்.7 கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் கொரோனா கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இது ஒரு புறம் இருந்தாலும், புதிய வகை கொரோனா குறித்து மக்களும் அச்சப்பட தொடங்கி இருக்கின்றனர். இதன் காரணமாக, தடுப்பூசி செலுத்துவதற்கு மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கான கொரோனா தடுப்பூசி மையம், மருத்துவ கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. கொரோனா வேகமாக பரவிய காலங்களில் அதிக அளவில் மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து தடுப்பூசி செலுத்தினர். தமிழகத்தில் முதல் முறையாக 1 லட்சம் எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திய மையம் என்ற பெயரை மதுரை மருத்துவ கல்லூரி பெற்றது. ஆனால், கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையத்தொடங்கியதுடன், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மந்தமாகியது. குறிப்பாக மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.

மீண்டும் ஆர்வம்

தற்போது பி.எப். 7 உருமாறிய கொரோனா குறித்த அச்சம் இருப்பதால் மதுரையில் உள்ள மக்கள், கடந்த 2 தினங்களாக அதிக அளவில் தடுப்பூசி செலுத்துவதற்காக மதுரை அரசு மருத்துவ கல்லூரி மையத்திற்கு வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், கொரோனா அச்சம் காரணமாக மக்கள் மீண்டும் தடுப்பூசி செலுத்த வருகின்றனர். கடந்தகாலங்களில் நாளொன்றுக்கு 20-க்கும் குறைவான நபர்களே தடுப்பூசி செலுத்துவதற்கு வந்து சென்றனர். ஆனால், இந்த 2 தினங்களில் தடுப்பூசி செலுத்த வரும் நபர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. மக்களின் வசதிக்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகள் போதிய அளவில் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி உடலுக்கு நல்லது தான். எனவே, தகுதியான நபர்கள் எந்தவித அச்சமும் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்றனர்.


Next Story