புதிய ரக சோளம் சாகுபடி


புதிய ரக சோளம் சாகுபடி
x

புதிய ரக சோளம் சாகுபடி

திருப்பூர்

போடிப்பட்டி

இரட்டை பலன் தரும் புதிய ரக சோளம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சிறுதானியங்கள்

நமது முன்னோர்களின் ஆரோக்கிய வாழ்வில் சிறுதானியங்களின் பங்கு பெருமளவு இருந்தது. சோளம், கம்பு, ராகி, சாமை, தினை, வரகு போன்ற சிறுதானியங்கள் அவர்களின் பிரதான உணவாக இருந்தது.

காலப்போக்கில் பிரதான உணவுப் பட்டியலில் இருந்து சிறுதானியங்களுக்கு விடை கொடுத்து விட்டனர். சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியுள்ளதால் மீண்டும் சிறுதானிய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அதேநேரத்தில் குறுகிய காலத்தில் அதிக மகசூல் ஈட்டக்கூடியதும், நோய் எதிர்ப்புத் திறன் கொண்டதுமான புதிய ரகங்களை அறிமுகப்படுத்துவதில் வேளாண் விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தானியம் மற்றும் கால்நடைத் தீவனம் என இரட்டை பலன் தரக்கூடிய கோ 32 சோளம் ரகம் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த 2020 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரகம் 105 முதல் 110 நாட்களில் 300 செ.மீ. வரை வளரக் கூடியது. உடுமலையையடுத்துள்ள ஆண்டியக்கவுண்டனூர் பகுதியில் கோ 32 விதைப்பண்ணையில் ஆளுயரத்துக்கு மேல் வளர்ந்து நிற்கும் சோளப்பயிர் அனைவரையும் கவர்ந்துள்ளது. இறவைப் பாசனத்தில் பயிரிடப்பட்டுள்ள இந்த கம்பு ஏக்கருக்கு 1200 கிலோ வரை மகசூல் தரும் வாய்ப்பு உள்ளது.

இரட்டை பலன் தரும்

இந்த விதைப்பண்ணையில் திருப்பூர் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- கோ 32 ரக சோளமானது குருத்து ஈ, தண்டு துளைப்பான் உள்ளிட்ட பூச்சிகளுக்கும், அடிச்சாம்பல், கதிர் பூசணம் உள்ளிட்ட நோய்களுக்கும் எதிர்ப்புத்திறன் கொண்டது. 11.31 சதவீதம் முதல் 14.66 சதவீதம் வரை புரதச் சத்தும், 4.95 சதவீதம் முதல் 5.8 சதவீதம் வரை நார்ச் சத்தும் கொண்டது.

மேலும் மிக உயரமாக வளர்வதாலும், கதிர்கள் பெரிதாகவும், மணிகள் நல்ல எடையுடனும் இருப்பதால் அதிக மகசூல் மட்டுமல்லாமல் அதிக அளவில் கால்நடைத் தீவனமும் தரக் கூடியது. இவ்வாறு இரட்டை பலன் தரும் கோ 32 ரக சோளத்தை விவசாயிகள் பயிரிட்டு பலனடையலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story