தூத்துக்குடி: காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டிக் கொலை
எட்டயபுரம் அருகே காதல் திருமணம் செய்த புதுமண தம்பதியை வீடுபுகுந்து சரமாரியாக வெட்டிகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டி ஆர்.சி தெரு சேவியர் காலணியை சேர்ந்தவர் முத்துக்குட்டி (வயது 50). இவரது மகள் ரேஸ்மா (20), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் அப்பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான வடிவேல் மகன் மாணிக்கராஜ் (26) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவரது காதலுக்கு ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் தனது மகளுக்கு வேறொரு மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முன்னர் காதல் ஜோடி இருவரும் ஊரை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்னர் இருவரும் ஊருக்கு வந்துள்ளனர். இவர்களது திருமணத்திற்கு ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று ரேஷ்மா மற்றும் அவரது கணவர் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த முத்துக்குட்டி இருவரையும் சராமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் காவல் ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இருவரது உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய முத்துக்குட்டியைத் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பார்வையிட்டார்.