புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டது
தினத்தந்தி செய்தி எதிரொலியாக வேளுக்குடியில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டது.
கூத்தாநல்லூர்;
தினத்தந்தி செய்தி எதிரொலியாக வேளுக்குடியில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டது.
பழுதடைந்த ரேஷன் கடை
கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடி கிராமம் உள்ளது. இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடை கட்டப்பட்டது. இந்த கடையின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சீனி, கோதுமை, ஆயில், மண்எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடை கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது. கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தன. இதனால் மழை காலங்களில் கட்டிடத்திற்குள் தண்ணீர் கசிந்து ரேஷன் பொருட்கள் சேதம் அடைந்து வந்தன.
வேறு இடத்திற்கு மாற்றம்
இதை தொடர்ந்து ரேஷன் கடை வேறு ஒரு வாடகை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. என்றாலும், அந்த வாடகை கட்டிடத்தில் போதுமான வசதி இல்லை என்றும், இதனால், பழுதடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து விட்டு அதே இடத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் வெளியானது.
புதிய கட்டிடம் கட்டப்பட்டது
இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழைய ரேஷன் கடையை இடித்து அகற்றி விட்டு அதே இடத்திலேயே புதிய ரேஷன் கடை கட்டிடம் அமைத்து தந்துள்ளனர்.இதை தொடர்ந்து புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தந்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.