புதுமண தம்பதி வெட்டிக்கொலை


புதுமண தம்பதி வெட்டிக்கொலை
x

கும்பகோணம் அருகே புதுமண தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

திருப்பனந்தாள்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

நர்சு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் துலுக்கவேலி அய்யாகோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சரண்யா(வயது 24). இவர், நர்சிங் படித்துவிட்டு சென்னை குன்றத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

சேகரின் மனைவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரை சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து இருந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தனது தாயாருக்கு உதவியாக சரண்யா உடன் இருந்து கவனித்து வந்தார்.

காதல் மலர்ந்தது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள பொன்னூரை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவியும் மனநலம் பாதிக்கப்பட்டு சென்னை கீ்ழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். தாயாருக்கு உதவியாக அவரது மகன் மோகன்(31) உடன் இருந்து கவனித்து வந்தார். இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

சரண்யாவின் தாயாரும், மோகனின் தாயாரும் ஒரே இடத்தில் அருகருகே உள்ள படுக்கையில் சிகிச்சை பெற்று வந்ததால் மோகனும், சரண்யாவும் அடிக்கடி சந்தித்துக்ெகாள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்ெகாண்டனர்.

இதனால் இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. முதலில் சாதாரணமாக ஏற்பட்ட இந்த பழக்கம் நாளடைவில் இவர்களுக்கிடையே காதலாக மலர்ந்தது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

பெற்றோர் ஏற்க மறுப்பு

இந்த நிலையில் இந்த காதல் விவகாரம் சரண்யாவின் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இதனை அறிந்ததும் சரண்யாவின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த காதலை சரண்யாவின் குடும்பத்தினர் ஏற்க மறுத்து விட்டனர்.

வேறு மாப்பிள்ளை பார்த்தனர்

இதனையடுத்து சரண்யாவை தங்கள் உறவினர் வகையில் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க சரண்யாவின் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதனால் சரண்யாவுக்கு தங்கள் உறவு வகையில் ஒரு மாப்பிள்ளையை தேடினர்.

இதனையடுத்து சோழபுரம் அருகே உள்ள தேவனாஞ்சேரியை சேர்ந்த ரஞ்சித் என்பவரை சரண்யாவுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

5 நாட்களுக்கு முன்பு திருமணம்

தனது பெற்றோர் தனது காதலை ஏற்றுக்கொள்ளாமல் வேறு இடத்தில் தனக்கு மாப்பிள்ளை பார்த்ததை அறிந்து சரண்யா மிகுந்த வேதனை அடைந்தார். இந்த தகவலை தனது காதலன் மோகனிடம் சரண்யா தெரிவித்தார்.

தனது பெற்றோர் சம்மதத்துடன் இந்த திருமணம் நடக்காது என்று அறிந்த சரண்யா தனது பெற்றோருக்கு தெரியாமல் காதலனை திருமணம் செய்து ெகாள்வது என்று முடிவு செய்தார். இந்த விவரத்தை சரண்யா தனது காதலனிடம் தெரிவித்தார். இதனையடுத்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு இருவரும் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர்.

தீர்த்துக்கட்ட திட்டம்

தங்கள் மகள் காதல் திருமணம் செய்து கொண்ட தகவலை அறிந்து சரண்யாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து இருவரையும் தீர்த்துக்கட்டுவது என்று முடிவு செய்தனர். இது தொடர்பாக சரண்யாவின் குடும்பத்தினர் தங்களுக்குள் ஆலோசனை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து சரண்யாவின் அண்ணன் சக்திவேல் சரண்யாவை செல்போனில் தொடர்பு கொண்டு எங்களுக்கு தெரியாமல் நீ திருமணம் செய்து கொண்டு விட்டாய். நடந்தது, நடந்ததாக இருக்கட்டும். உங்களுக்கு நாங்கள் விருந்து வைக்க வேண்டும். எனவே நீங்கள் இருவரும் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்துள்ளார்.

வெட்டிக்கொலை

இதை உண்மை என்று நம்பி இருவரும் நேற்று சென்னையில் இருந்து சோழபுரம் துலுக்கவேலிக்கு வந்தனர். தங்கள் இருவருக்கும் பெற்றோர் மிகுந்த வரவேற்பு கொடுப்பார்கள் என்று மிகுந்த ஆசையுடன் சரண்யா தனது காதல் கணவருடன் சென்னையில் இருந்து புறப்பட்டு தாய் வீட்டுக்கு வந்தார். நேற்று மாலையில் புதுமண தம்பதிகள் இருவரும் சரண்யாவின் வீட்டுக்கு வந்தனர்.

அப்போது அங்கு வந்த சரண்யாவின் அண்ணன் சக்திவேல்(31) மற்றும் சக்திவேலின் உறவினரும், சரண்யாவை திருமணம் செய்ய இருந்த மாப்பிள்ளையுமான தேவனாஞ்சேரியை சேர்ந்த ரஞ்சித் ஆகிய இருவரும் சேர்ந்து வீட்டு வாசலில் வைத்து புதுமணத்தம்பதியை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அதே இடத்தில் இருவரும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.

கைது

இதுகுறித்து தகவல் அறிந்த சோழபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அரிவாளால் வெட்டிக்கொல்லப்பட்ட இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களது உடல்கள் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த கொலை சம்பவம் குறித்து சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சக்திவேல் மற்றும் ரஞ்சித்தை வலைவீசி தேடி வந்தனர்.

தலைமறைவான இருவரையும் பிடிக்க இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் நேற்று இரவு சக்திவேல் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரையும் பிடித்து கைது செய்தனர். கைதான இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பரபரப்பு

காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டிக்ெகாலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story