5ஜி சேவை வழங்காத நிறுவனத்துக்கு அபராதம்
வாடிக்கையாளருக்கு 5ஜி சேவை வழங்காத நிறுவனத்துக்கு அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
நெல்லை பாளையங்கோட்டை ரகுமத் நகரை சேர்ந்தவர் என்ஜினீயர் செந்தில்குமரன் (வயது 44). இவர் தனியார் செல்போன் நிறுவனத்திடம் இணையதள இணைப்பு பெற்றுள்ளார். இணைப்பு வழங்கியபோது நிறுவனம் சார்பில் செந்தில்குமரனுக்கு 'அமேசான் பிரேம் மற்றும் ஓ.டி.டி.' ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஆனால் அவ்வாறு இலவசமாக வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக நிறுவனத்திடம் செந்தில்குமரன் புகார் செய்துள்ளார். அந்த நிறுவனத்தின் பணியாளர் ஆய்வு செய்து இணையதளத்தில் 4ஜி இணைப்பு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. 5ஜி இணைப்பு கொடுத்தால் மட்டுமே இலவசமாக வழங்கப்படும் வசதிகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். ஆனால் 3 மாத காலமாக நிறுவனம் செந்தில்குமரனுக்கு 5ஜி சேவை வழங்கவில்லை
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செந்தில்குமரன், நெல்லை நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கினை நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் விசாரித்து, செந்தில்குமரனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம், வழக்கு செலவு ரூ.2 ஆயிரம் மற்றும் அவர் 3 மாதமாக செலுத்திய கட்டண தொகை ரூ.3,536 ஆகியவற்றை தனியார் நிறுவனம் வழங்குமாறு உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.