கோகுல்ராஜ் கொலையில் சாகும் வரை சிறை தண்டனை பெற்ற 10 பேர் மேல்முறையீடு: "பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை மீண்டும் சாட்சி பெட்டியில் ஏற்றுவது அவசியமாகிறது" - இன்று ஆஜர்படுத்த போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கோகுல்ராஜ் கொலையில் சாகும் வரை சிறை தண்டனை பெற்ற 10 பேர் மேல்முறையீடு: பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை மீண்டும் சாட்சி பெட்டியில் ஏற்றுவது அவசியமாகிறது - இன்று ஆஜர்படுத்த போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் 10 பேருக்கு சாகும் வரை சிறைதண்டனையை எதிர்த்து தாக்கலான மேல்முறையீட்டு மனு மீது நேற்று விசாரணை நடந்தது. பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை சாட்சி பெட்டியில் ஏற்றுவது அவசியமாகிறது என்பதால் இன்று ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் 10 பேருக்கு சாகும் வரை சிறைதண்டனையை எதிர்த்து தாக்கலான மேல்முறையீட்டு மனு மீது நேற்று விசாரணை நடந்தது. பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை சாட்சி பெட்டியில் ஏற்றுவது அவசியமாகிறது என்பதால் இன்று ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

10 பேருக்கு சாகும்வரை சிறை

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் சுவாதி என்ற இளம்பெண்ணை காதலித்ததாகவும், இந்த விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக பதிவான வழக்கு, ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது.

விசாரணை முடிவில், இந்த வழக்கில் கைதான யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி தீர்ப்பளித்தது.

மேல்முறையீடு

இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தங்களுக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோகுல்ராஜ் வழக்கில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகள், தனியார் தொலைக்காட்சியில் வெளிவந்த பதிவுகளை அடிப்படையாக வைத்தும், நாங்கள் தலைமறைவாக இருந்ததாலும் எங்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து கீழ் கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஆனால் இந்த வழக்கின் சாட்சிகளாக அதிகாரிகளும், நிபுணர்களும்தான் உள்ளனர். அனுமானத்தில்தான் அவர்கள் சாட்சியம் அளித்துள்ளனர். அதன்படி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. எங்களுக்கு கீழ்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும். அதுவரை இந்த தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுக்களில் கூறியிருந்தனர்.

பிறழ்சாட்சி

இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த இடைக்கால உத்தரவு வருமாறு:-

தொடக்கத்தில் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக சுவாதி இருந்துள்ளார். இதனால் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளது. அதன்பின் அவர், முன்தெரிவித்த வாக்குமூலத்திற்கு எதிரான தகவல்களை தெரிவித்ததால் பிறழ்சாட்சியாக அறிவிக்கப்பட்டார்.

இடைப்பட்ட காலத்தில் ஏதோ நடந்திருக்கிறது என்பது தெரிகிறது. முக்கிய வழக்குகளில் சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறுவது தற்போது சாதாரணமாக நடக்கிறது.

குடும்பத்தினருக்கு பாதுகாப்பு

கிரிமினல் விசாரணையில் திருப்தி அடையும் விசாரணை கோர்ட்டைப்போல வாயை மூடிக்கொண்டு பார்வையாளராக மட்டும் நாங்கள் இருக்கமாட்டோம். சுவாதியை மீண்டும் சாட்சி பெட்டியில் ஏற்ற எங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவது அவசியமாகிறது.

அந்த வகையில் வழக்கின் சாட்சியான சுவாதிக்கு திருமணமாகி, தற்போது நாமக்கல் மாவட்டத்தில் வசிப்பதை அறிந்தோம். அவருக்கும், குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதும் தெரிகிறது. அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்க வேண்டும்.

சுவாதியை ஆஜர்படுத்துங்கள்

இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள், சுவாதி மற்றும் அவருடைய குடும்பத்தினரை சந்திப்பதோ, தொலைபேசி மூலம் பேசுவதோ இல்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்த வேண்டும்.

சுவாதியை போதுமான பாதுகாப்புடன் இந்த கோர்ட்டின் நீதிபதிகள் அறையில் 25-ந்தேதி (இன்று) போலீசார் ஆஜர்படுத்த வேண்டும். அந்த அறையில் இருந்து அவர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்படுவார்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story