சேலத்தில் வீட்டில் ரகசியமாக துப்பாக்கிகள் தயாரித்த பின்னணி என்ன?-கைதான 2 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
சேலத்தில் வீட்டில் ரகசியமாக துப்பாக்கிகள் தயாரித்த பின்னணி என்ன? என்பது குறித்து கைதான 2 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவலில் எடுத்து விசாரணை
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புளியம்பட்டி பகுதியில் கடந்த மே மாதம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் கைத்துப்பாக்கிகளுடன் வந்த செவ்வாய்பேட்டையை சேர்ந்த என்ஜினீயர் சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையம் பகுதியை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் அவர்கள் செட்டிச்சாவடி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து யூ-டியூப்பை பார்த்து ரகசியமாக துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது. இந்த வழக்கை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோரை கோர்ட்டு மூலம் 7 நாட்கள் காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் நிலையம்
சென்னையில் வைத்து விசாரித்த அவர்களை என்.ஐ.ஏ. போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஜித், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் நேற்று சேலம் அழைத்து வந்தனர். காலையில் சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோரை ஓமலூர் போலீஸ் நிலையம் மற்றும் அவர்கள் பிடிபட்ட இடம் ஆகியவற்றுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் அவர்கள் தங்கியிருந்த செட்டிச்சாவடி பகுதிக்கு அழைத்து சென்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதுதவிர எருமாபாளையம் பகுதியில் உள்ள நவீன் சக்கரவர்த்தியின் வீடு, துப்பாக்கிக்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட்டதாக கூறிய கடை ஆகியவற்றுக்கும் சென்று அதிகாரிகள் பார்வையிட்டு விசாரித்தனர்.
பின்னணி என்ன?
துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் யார்?, மேலும் யார் மூலம் அந்த வீடு வாடகைக்கு கொடுக்கப்பட்டது?, ரகசியமாக துப்பாக்கிகள் தயாரிப்பதற்கு பின்னணி என்ன?, அதற்கு பயிற்சி அளித்தது யார்?, துப்பாக்கிகள் தயாரிப்பதற்கான பொருட்கள் எங்கு வாங்கப்பட்டது?, பணம் எப்படி கிடைத்தது? என பல்வேறு கோணங்களில் அவர்களிடம் அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.