சேலத்தில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வாலிபர்கள்: முக்கிய தலைவர்களை கொல்ல சதித்திட்டம்-என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்
சேலத்தில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வாலிபர்கள், முக்கிய தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியது என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிகள் பறிமுதல்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புளியம்பட்டி பகுதியில் கடந்த மே மாதம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த என்ஜினீயர் சஞ்சய்பிரகாஷ் (வயது 25), எருமாபாளையத்தை சேர்ந்த பட்டதாரி நவீன் சக்கரவர்த்தி (25) ஆகியோரிடம் இருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் அவர்கள் செட்டிச்சாவடி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து யூடியூப் பார்த்து துப்பாக்கிகள் தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் ஓமலூர் போலீசார் கைது செய்தனர். மேலும், இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக அழகாபுரத்தை சேர்ந்த கபிலன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இதுதவிர கைதானவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வீரப்பன், பிரபாகரன் ஆகியோரின் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் இந்த வழக்கு சேலம் கியூ பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
இதையடுத்து கியூ பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தநிலையில், இந்த வழக்கை கடந்த ஜூலை மாதம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) எடுத்துக்கொண்டது. அவர்கள் மறு வழக்குப்பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தினர். அதில், துப்பாக்கிகள் தயாரித்த சஞ்சய்பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோரை கடந்த ஆகஸ்டு மாதம் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும், சேலத்தில் உள்ள அவர்களது வீடு மற்றும் துப்பாக்கிகள் தயாரித்த செட்டிச்சாவடி வாடகை வீடு ஆகியவற்றிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் செட்டிச்சாவடியில் உள்ள வீட்டிற்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் வந்து மீண்டும் சோதனை நடத்தினர். அப்போது, சஞ்சய்பிரகாஷ், நவீன்சக்கரவர்த்தியுடன் தொடர்பில் இருந்த சிவகங்கையை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
முக்கிய தலைவர்களை கொல்ல சதி
சேலம், சிவகங்கையில் நடந்த இந்த சோதனையில் விடுதலைப்புலிகள் தொடர்பான கணினி ஹார்டுடிஸ்க்குகள், புத்தகங்கள், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை தயாரிக்க பல்வேறு பொருட்களை வாங்கியதற்கான ஆவணங்கள், வெடி மருந்துகள், அடர்ந்த காட்டிற்குள் வாழ தேவையான உபகரணங்கள் போன்றவை பறிமுதல் செய்தனர்.
இது ஒருபுறம் இருக்க, சேலத்தில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வாலிபர்கள், முக்கிய தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியது என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு
இந்த விசாரணை குறித்து என்.ஐ.ஏ.அதிகாரிகள் கூறுகையில், சேலத்தில் துப்பாக்கி தயாரித்து கைதான இருவரும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளனர். அவர்கள் தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தவும், முக்கிய தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டி, அவர்களை குறி வைத்து துப்பாக்கிகள், வெடி மருந்துகள் தயாரித்து வந்துள்ளனர். சேலம், சிவகங்கையில் நடந்த சோதனையில் சதித்திட்டம் தீட்டியதற்கான ஆதாரங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளோம். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் விவரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என்றனர்.