என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் சாலை மறியல்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியதை கண்டித்து தமிழகத்தில் பல இடங்களில் முஸ்லிம் அமைப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கோவை,
தமிழ்நாட்டில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர்கள், நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சில நிர்வாகிகளை கைது செய்துள்ளனர்.
கோவையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.எஸ்.இஸ்மாயில் (வயது 43), கர்நாடகாவை சேர்ந்த தேசிய செயலாளர் முகமது சாகிப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதை கண்டித்து கோவையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலை மறியல் செய்ய முயன்றவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து சாய்பாபா காலனி உள்ளிட்ட 4 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
108 பேர் கைது
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று மறியலில் ஈடுபட்ட 108 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். சாலை மறியலில் போலீசுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட 11 பேரை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இந்தநிலையில் உக்கடத்தில் அரசு பஸ் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
திண்டுக்கல், தேனி
இதேபோல் திண்டுக்கல் பேகம்பூரில் நடந்த சாலை மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேனி மாவட்டம் கம்பத்தில் முஸ்லிம் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம் பண்பொழியில் 20-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கடலூர் மாவட்டத்தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி-சிதம்பரம் சாலையில் மறியல் நடந்தது. திருப்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 37 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் 8 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 140 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோட்டில் சாலையில் டயரை எரித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியிலும் மறியல் போராட்டம் நடந்தது.
சென்னை
சென்னை வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் பெண்கள் உள்பட சுமார் 60-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
அதேபோல் தாம்பரம் பகுதியில் ஜி.எஸ்.டி. சாலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.