திருப்பூர் பகுதியில் ஆடுகளை வேட்டையாடும் நீலகிரி புலி


திருப்பூர் பகுதியில் ஆடுகளை வேட்டையாடும் நீலகிரி புலி
x
திருப்பூர்


கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் டிஜோ தாமஸ் (வயது 46). இவர் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா வனப்பகுதிகளில் வன உயிரினங்கள் குறித்து 14 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் முகாம் அமைத்து வனவிலங்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் திருப்பூர் மாவட்டம் மூலனூர், அவினாசி அருகே பந்தம்பாளையம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆடுகளை மர்ம விலங்கு வேட்டையாடுவது அதிகரித்துள்ளதாக செய்தி கிடைத்ததும் அந்த பகுதிகளில் டிஜோ தாமஸ் சென்று விவசாயிகளை சந்தித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழும் அபூர்வ விலங்கினமான நீலகிரிபுலி என்ற விலங்கு வந்து சென்றதை உறுதிப்படுத்தியுள்ளார்.

நீலகிரி புலி

இது குறித்து அவர் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-

நீலகிரி கடுவா என்பது நீலகிரி புலி என்று குறிப்பிடப்படுகிறது. கடுவா என்பது புலியை மலையாள மொழியில் குறிப்பிடும் சொல்லாகும். வேங்கைப்புலிகள், சிறுத்தை புலிகள் போன்று இல்லாமல் நீலகிரி புலி என்பது சாதுவானது. இதுதொடர்பான பதிவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. நீலகிரி புலி என்பது புலியின் உடல் அமைப்பையும், நாயின் முக அமைப்பையும் கொண்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில காடுகளில் தான் இவை வசிக்கின்றன. இவை நாய்களை அதிகமாக வேட்டையாடும். சில நேரங்களில் நாய்கள் கிடைக்காதபட்சத்தில் ஆடு, கோழிகளை வேட்டையாடும். மனிதர்கள் நடமாட்டம் இருந்தால் இவை வராது. குறிப்பாக இரவு நேரத்தில் இவை வேட்டையாடும். மனிதர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதால் இதுவரை புகார்கள் அதிகம் இல்லை.

நீலகிரி வனப்பகுதியில் இருளர் சமூகத்தினர் இந்த விலங்கை பார்த்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியிலும் விவசாயிகள் இந்த விலங்கை பார்த்துள்ளனர். அந்த விவசாயிகளிடம் உரையாடியதில் இருந்து அந்த விலங்கு குறித்து எனக்கு தெரியவந்தது. கேரள மாநில காட்டுப்பகுதியில் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந்தேதி வித்தியாசமான ஒரு விலங்கின் காலடி சுவடு கண்டுபிடிக்கப்பட்டது. புலி, சிறுத்தை கால்தடத்தை விட பெரியதாகவும், நகங்கள் பதிந்தும் காணப்பட்டன. புலி, சிறுத்தை கால்தடங்களில் நகம் பதிவு இருக்காது. இதனால் வனத்துறையினர் காலடி சுவட்டை பார்த்துவிட்டு இவை புலி, சிறுத்தை இல்லை. நாய் என்று தெரிவித்து விட்டனர்.

சத்தியமங்கலம் வனப்பகுதி

ஆனால் அவை நீலகிரி புலியின் கால்சுவடு ஆகும். நீலகிரி புலிக்கு பெரிய நகம் உண்டு. கால் சுவடிலும் நக பதிவு காணப்படும். உலகில் வேறு எங்கும் இந்த விலங்கு கிடையாது. மேற்கு தொடர்ச்சி மலையை மையமாக கொண்டு 150 கிலோ மீட்டர் சுற்றளவில் வாழ்ந்து வருகிறது. இந்த விலங்கின் பரிணாம வளர்ச்சித்தான் பூனை இனமும், நாய் இனமும் என்பது எனது ஆராய்ச்சியின் முடிவாகும். நீலகிரி புலி குறித்து வன அறிவியலாளர்கள் கருத்தரங்கில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளேன்.

அவினாசி அருகே பந்தம்பாளையம், மூலனூர் பகுதியில் நாய்கள் மற்றும் ஆடு, கோழிகளை இரவு நேரங்களில் வேட்டையாடுவது அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர். அந்த பகுதியில் உள்ள மக்களை சந்தித்து விவரங்களை கேட்டபோது அவர்களும் அந்த விலங்கு நாயை விட பெரிதாக இருந்தது என்றே கூறினார்கள். சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து நீலகிரிபுலி வந்து சென்றிருக்க வேண்டும். ஒரு நாளுக்கு 150 கிலோ மீட்டர் தூரம் இதன் பயணம் இருக்கும். கால் சுவடு நீலகிரி புலி உடையது தான். நாய்களை விட உருவத்தில் பெரிதாக இருப்பதால் இந்த விலங்கைத்தான் முன்காலத்தில் நரி என்று முன்னோர்கள் அழைத்திருப்பார்கள்.

விவசாயிகளுக்கு இழப்பீடு

தற்போது குள்ளநரி இருக்கிறது. அப்படியென்றால் உருவத்தில் பெரியநரி இருந்திருக்க வேண்டும். எனவே நீலகிரி புலி தான் நரியாக இருக்க வேண்டும் என்பது எனது ஆய்வு. புலிகளை விட நீலகிரி புலி வலிமை குறைந்தது. இதனால் புலிகளுடன் ஏற்பட்ட மோதலில் இவற்றின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம். இவை நீண்டகாலமாக உள்ள விலங்கினம். அபூர்வ விலங்கினமாக உள்ள இந்த விலங்கு அழிவின் விளிம்பில் உள்ளது. இந்த விலங்கினம் வனத்துறையினரின் பட்டியலில் இடம்பெறாமல் உள்ளது. அதனால் நீலகிரிபுலியால் ஆடு, கோழிகளை இழக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்காமல் இருக்கிறது. இதை கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீலகிரி புலி கண்டறியப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story