கொய்மலர் நாற்றுகளை உற்பத்தி செய்யும் நீலகிரி விவசாயிகள்


கொய்மலர் நாற்றுகளை உற்பத்தி செய்யும் நீலகிரி விவசாயிகள்
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு பதிலாகக கொய்மலர் நாற்றுகளை தாங்களாகவே உற்பத்தி செய்யும் பணியில் நீலகிரி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி

கோத்தகிரி,

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு பதிலாகக கொய்மலர் நாற்றுகளை தாங்களாகவே உற்பத்தி செய்யும் பணியில் நீலகிரி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கொய்மலர்கள்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் சுப நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால், கொய்மலர் விற்பனை கடும் வீழ்ச்சியடைந்தது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்து, இயல்புநிலை திரும்பி சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கொய்மலர்களுக்கு மீண்டும் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.

இதை தொடர்ந்து விவசாயிகள் தங்களது குடில்களில் கார்னேசன், ஜர்பரா, லில்லியம் மற்றும் ஐட்ரோ ஜெனியா உள்ளிட்ட கொய்மலர்களை சாகுபடி செய்ய தொடங்கினர். இந்தநிலையில் நட்சத்திர ஓட்டல்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அலங்காரம் செய்வதற்காக கொய்மலர்கள் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

மூலதன செலவு குறையும்

இதனால் தற்போது கொய்மலர்கள் தேவை மீண்டும் அதிகரித்து உள்ளது. மேலும் போதுமான கொள்முதல் விலையும் கிடைத்து வருகிறது. இதுமட்டுமின்றி கென்யா, ஆலந்து நாடுகளில் மட்டுமே வளரக்கூடிய, அலங்காரத்திற்காக அதிகமாக பயன்படுத்தும் ஐட்ரோ ஜெனியா மலர்களை கோத்தகிரி பகுதியில் சில விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். ஒரே செடியில் வெள்ளை, நீலம், இளஞ்சிவப்பு என 3 நிறங்களில் மலர்கள் பூக்கும். இந்த மலர்களுக்கு வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் அதிக வரவேற்பு உள்ளது.

இந்த ஐட்ரோ ஜெனியா மலர் ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த மலர்களை விவசாயிகள் ஏற்றுமதி செய்து வருகின்றனர். கொய்மலர் விவசாயிகள் மலர் நாற்றுகளை வெளிநாடுகளில் இருந்து நேரடியாகவும், பூனே நகரத்தில் இருந்து அதிகளவு வாங்கி பயிரிட்டு வருகின்றனர். தற்போது மிளிதேன், மசக்கல், கேர்கம்பை உள்ளிட்ட பகுதிகளில் கொய்மலர் பயிரிட்டு உள்ள விவசாயிகள், குடில்களின் ஒரு பகுதியில் நாற்றுகள் தயாரிப்பதற்காக ஒதுக்கி உள்ளனர். அங்கு விதைகளை விதைத்து நாற்றுகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு வெளியிடங்களில் இருந்து இறக்குமதி செய்வதற்கு பதிலாக, விவசாயிகள் தாங்களாகவே கொய்மலர் நாற்றுகளை உற்பத்தி செய்வதன் மூலம் மூலதன செலவு குறைய வாய்ப்பு உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story