நீலகிரி, குன்னூர் மலைக்காட்சிகள்: தமிழகத்துக்கு மத்திய அரசு விருது
நீலகிரி, குன்னூர் மலைக்காட்சிகளுக்கான வெள்ளி விருதை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியது.
சென்னை,
இந்தியாவின் சிறந்த மலை மற்றும் மலைக்காட்சிகளுக்கான 'அவுட்லுக் டிராவலர்' என்ற விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு விருது வழங்கும் விழா டெல்லியில் நடந்தது.
இதில் தமிழகத்தில் உள்ள நீலகிரி மற்றும் குன்னூர் மலைக்காட்சிகளுக்கான வெள்ளி விருதை தமிழகத்திற்கு, மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை மந்திரி ஜி.கிஷன் ரெட்டி வழங்க, தமிழக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன் மற்றும் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் சந்தீப் நந்தூரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
விழாவில் சிறந்த சுற்றுச்சூழல் சுற்றுலாத்தலம், சிறந்த வனவிலங்கு தலம், சிறந்த சாகசத் தலம் மற்றும் சிறந்த விழாத் தலம் உள்ளிட்ட 11 வெவ்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்திய சுற்றுலாத் துறையைச் சேர்ந்த முக்கிய நபர்களைக் கொண்டு விருதுகள் மதிப்பீடு செய்யப்பட்டன. இந்த நிகழ்வில் சுற்றுலாத்துறை மேம்பாடுகள் தொடர்பான குழு விவாதங்களும் நடைபெற்றன.