நீலகிரியில் கல்லறை திருநாள் அனுசரிப்பு
முன்னோர்களை நினைவு கூரும் வகையில், நீலகிரியில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.
ஊட்டி,
முன்னோர்களை நினைவு கூரும் வகையில், நீலகிரியில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.
கல்லறை திருநாள்
உலகத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 2-ந் தேதி கிறிஸ்தவர்களால் கல்லறை திருநாள் எனப்படும் அனைத்து ஆன்மாக்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. கல்லறை திருநாளையொட்டி ஊட்டி மேரீஸ்ஹில் பகுதியில் உள்ள புனித மரியன்னை ஆலயத்தில் நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் 9 பங்கு தந்தைகள் சிறப்பு திருப்பலி நடத்தினர். இதில் இறந்தவர்களுக்காக சிறப்பு பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்டது.
திருப்பலிக்கு பின் கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனையும், பாரம்பரிய பாடலை ஆயரும், பங்கு தந்தைகளும் பாடிய வண்ணம் அனைத்து கல்லறைகளையும் மந்திரித்தனர். ஊட்டியில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களது இறந்த உறவினர்கள் மற்றும் முன்னோர்களது கல்லறைகள் உள்ள காந்தல் கல்லறை தோட்டத்திற்கு சென்றனர். அங்கு இறந்தவர்களை நினைவு கூரும் வகையில் கல்லறையில் மலர்கள் வைத்தும், மெழுகுவர்த்திகளை ஏற்றியும் வைத்தனர்.
பிரார்த்தனை
தொடர்ந்து அவர்கள் குடும்பத்தினருடன் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். சிலர் இறந்தவர்களுக்கு பிடித்த உணவுகளை கல்லறை மேல் வைத்து இருந்ததை காண முடிந்தது. கிறிஸ்தவர்கள் பாடல்கள் பாடியும், பிரார்த்தனை செய்தும் தங்களது குடும்பத்தினருடன் இறந்தவர்களை நினைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.இதைதொடர்ந்து மாலையில் காந்தல் கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் மலர்கள், மெழுகுவர்த்திகளால் அலங்கரிக்கப்பட்ட கல்லறைகள் மந்திரிக்கப்பட்டது. ஊட்டி சி.எஸ்.ஐ. புனித தாமஸ் ஆலயத்தில் ஆன்மாக்களின் தினத்தையொட்டி, பங்கு தந்தை இம்மானுவேல் வேழவேந்தன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதேபோல் நீலகிரியில் உள்ள மற்ற கத்தோலிக்க திருச்சபைகளிலும் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதற்காக கல்லறைகள் புதுப்பிக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.