சேத்தியாத்தோப்பு அருகே நடந்தஎன்.எல்.சி. நிலக்கரி சுரங்க விரிவாக்க பணி திடீர் நிறுத்தம்


சேத்தியாத்தோப்பு அருகே நடந்தஎன்.எல்.சி. நிலக்கரி சுரங்க விரிவாக்க பணி திடீர் நிறுத்தம்
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பு அருகே நடந்த என்.எல்.சி. நிலக்கரி சுரங்க விரிவாக்க பணி திடீரென நிறுத்தப்பட்டது.

கடலூர்


நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரிகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கென 3 நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. இதில் 2-வது நிலக்கரி சுரங்கம் மந்தாரக்குப்பம் பகுதியில் அமைந்துள்ளது. நிலக்கரியின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, இந்த சுரங்கத்தை விரிவுப்படுத்தும் விதமாக அருகே உள்ள நிலங்களை கையகப்படுத்தி இருந்தது.

2006-ம் ஆண்டு பணிகள் தொடக்கம்

அதாவது, வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழை, மும்மூடி சோழகன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்தும் பணியை நிர்வாகம் மேற்கொண்டது. இந்த பணியானது கடந்த 2006-ம் ஆண்டு முதலே தொடங்கப்பட்டது. தொடர்ந்து கையகப்படுத்தப்பட்ட இடத்தில் உடனடியாக சுரங்க பணிகளை நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. இருப்பினும் அந்த இடத்தை விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், தற்போது 2-வது சுரங்கத்தை விரிவுப்படுத்த என்.எல்.சி. நிர்வாகம் முடிவு செய்தது. இதுபற்றி அறிந்த விவசாயிகள் மற்றும் கிராமத்து மக்கள் தங்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும், நிரந்தர தன்மையுள்ள வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தை முன்னெடுத்தனர். மேலும் புதிய நிலஎடுப்பு சட்டத்தின் அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து பலக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, மக்களை நிர்வாகம் சமாதானப்படுத்தியது. இருப்பினும் பலருக்கு இதில் உடன்பாடில்லை என்று தெரிகிறது.

கிராம மக்கள் எதிர்ப்பு

இருந்த போதிலும் நிர்வாகமானது, உடனடியாக சுரங்கவிரிவாக்க பணியை கையில் எடுத்தது. அதாவது கடந்த 9-ந்தேதி முதல் வளையமாதேவி பகுதியில் நிலத்தை சமன் செய்யும் பணி, சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை சேத்தியாத்தோப்பு அருகே பரவனாற்றுடன் இணைக்கும் வகையில் வாய்க்கால் வெட்டும் பணி உள்ளிட்ட பணிகளை நிர்வாகம் தொடங்கியது.

இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பாதுகாப்புக்காக போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். கடந்த 2 நாட்களாக போலீஸ் பாதுகாப்புடன் இந்தபணிகளை என்.எல்.சி. நிர்வாகம் மேற்கொண்டது.

போராட்டகளமான கிராமம்

கிராமமக்களின் சாலை மறியல் போராட்டம், பா.ம.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சியினரின் போராட்டங்கள் என்று கடந்த 2 நாட்களாக வளையமாதேவி பகுதி போராட்டக்களமாக மாறி இருந்தது.

இந்த நிலையில் என்.எல்.சி. நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து நேற்று பா.ம.க. சார்பில் கடலூர் மாவட்டத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

பணிகள் நடைபெறவில்லை

கடையடைப்பு போராட்டம் ஒருபக்கம் நடைபெற்ற நிலையில், நேற்று வளையமாதேவி பகுதியில் சுரங்க பணிகளுக்கான நிலத்தை சமன்படுத்துதல், வாய்க்கால் வெட்டும் பணி உள்ளிட்டவை எதுவும் நடைபெறவில்லை.

மேலும் 2 நாட்களாக பாதுகாப்புக்காக இருந்த போலீசாரும் அங்கு இல்லை. போராட்டமும், போலீஸ் குவிப்புமாக பரபரப்புடன் காணப்பட்ட வளையமாதேவி பகுதி நேற்று கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்ததை பார்க்க முடிந்தது.

காரணம் என்ன?

திடீரென என்.எல்.சி. நிர்வாகம் பணியை நிறுத்தியது குறித்து விசாரித்த போது, வளையமாதேவி பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்த போலீசார், முழு அடைப்பு காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டனர். இதன் காரணமாக, நேற்று சுரங்க பணிகள் நடைபெறவில்லை. மாறாக இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) வழக்கம் போல் பணிகள் நடைபெறும் என்றும், தற்போது தற்காலிகமாக தான் பணிகள் நிறுத்தப்பட்டு இருப்பதாக நிர்வாக தரப்பு தகவல்கள் தொிவிக்கின்றன.


Next Story