நகைக்காக என்.எல்.சி. தொழிலாளி கொலை


நகைக்காக என்.எல்.சி. தொழிலாளி கொலை
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலியில் நகைக்காக என்.எல்.சி. தொழிலாளி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்

கடலூர்

நெய்வேலி

நெய்வேலியில் நகைக்காக என்.எல்.சி. தொழிலாளி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.

என்.எல்.சி. நிரந்தர தொழிலாளி

நெய்வேலி 28-வது வட்டத்தை சேர்ந்தவர் நாராயணன்(வயது 58). என்.எல்.சி. நிரந்தர தொழிலாளியான இவர் கடந்த 28-ந்தேதி முதற்கட்ட பணிக்கு சென்றார். பின்னர் பணி முடிந்து வீட்டிற்கு வரும்போது, கடைத்தெருவிற்கு சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். அதன்பின்னர் நீண்ட நேரமாகியும் நாராயணன் வீட்டிற்கு வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது 14-வது வட்டத்தில் உள்ள கல்லூரியின் பின்புறம் நாராயணன் பிணமாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

கழுத்தை நெரித்து கொலை

அதன்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாராயணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணன் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு 9-வது வட்டத்தை சேர்ந்த தொழிலாளி முத்துக்குமார்(50) என்பவர் சுற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து முத்துக்குமாரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்தான், நாராயணனை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

பரபரப்பு வாக்குமூலம்

தொடர்ந்து முத்துக்குமார் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த 28-ந்தேதி 14-வது வட்டத்தில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது நாராயணன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அவர் கையில் மோதிரம் அணிந்திருந்ததால், அதை பறிக்க வேண்டும் என்ற நோக்கில் அவரை பின்தொடர்ந்து சென்று மறித்தேன். பின்னர் நாராயணன் அணிந்திருந்த மோதிரத்தை தருமாறு கேட்டேன். அதற்கு அவர் தரமறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த நான், அவரை தாக்கி கீழே தள்ளினேன். பின்னர் அவருடைய கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 1 பவுன் மோதிரத்தை எடுத்து சென்று விட்டேன்.

இவ்வாறு அவர் போலீசில் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story