என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு மகாத்மா விருது
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு மகாத்மா விருது வழங்கப்பட்டது.
நெய்வேலி:
பிரபல காந்தியவாதி சச்தேவா என்பவரால் நடத்தப்பட்டு வரும் தன்னார்வ அமைப்பானது, ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான பொதுநலப்பணிகளில் ஈடுபட்டு வருபவர்களை பாராட்டி மகாத்மா விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டிற்கான கோவிட்-19 என்ற கொரோனா நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளை மிகவும் மனிதாபிமானத்துடன் மேற்கொண்டதற்காக என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு மகாத்மா விருது வழங்க முடிவு செய்தது. இதையடுத்து புதுடெல்லியில் நடைபெற்ற மகாத்மா விருது வழங்கும் விழாவில் அரிஜன சேவா சங்க தலைவரும், பேராசிரியருமான பிரபல காந்தியவாதி சங்கா் குமார் சன்யால், சச்தேவா, புதுடெல்லி ஸ்ரீராம் பள்ளிகளின் துணைத் தலைவி ராதிகா பரத்ராம் ஆகியோர் விருதை என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு வழங்கினர். அதனை என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவர் ராக்கேஷ் குமார் சார்பில் மருத்துவதுறையின் பொது கண்காணிப்பாளர் டாக்டர் தாரிணி மவுலி, சுகாதாரத்துறை பொது மேலாளர் கணேசன், புதுடெல்லி மண்டல அலுவலக பொது மேலாளர் தினேஷ்குமார் மிட்டல், என்.எல்.சி. கற்றல் மற்றும் மேம்பாட்டுத்துறை துணை தலைமை மேலாளர் சுலக்னா சர்க்கார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். ஏற்கனவே, என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் கோவிட் தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளை பாராட்டி இந்திய மக்கள் தொடர்பு சங்கம் என்ற அமைப்பு, சிறப்பு விருதை வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.