என்.எல்.சி. நிறுவனத்துக்காக விவசாயிகளிடம் இருந்து நிலம் பறிக்கப்படுவதை தடுக்க வேண்டும்


என்.எல்.சி. நிறுவனத்துக்காக விவசாயிகளிடம் இருந்து நிலம் பறிக்கப்படுவதை தடுக்க வேண்டும்
x

என்.எல்.சி. நிறுவனத்துக்காக விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை,

கடலூர் மாவட்டம் நெய்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் என்.எல்.சி. நிறுவனம், அதன் சுரங்க விரிவாக்கத்திற்காக 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த முடிவு செய்திருப்பதையும், வேளாண்மையையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என்.எல்.சி. சுரங்க விரிவாக்க திட்டத்திற்கு எதிராக பா.ம.க.வும், பொதுமக்களும் இணைந்து கடந்த பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருவதையும் முதல்-அமைச்சராகிய தாங்கள் நன்கு அறிவீர்கள்.

ஒரு காலத்தில் 8 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் இப்போது 1000 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. வெள்ளக்காலங்களில் என்.எல்.சி. நிறுவனம் எந்த சமூகப்பொறுப்பும் இல்லாமல் அதன் சுரங்கங்களில் உள்ள நீரை ராட்சத குழாய்கள் மூலம் மிகப்பெரிய அளவில் வெளியேற்றுகிறது. அதனால், வெள்ளம் அதிகரித்து, மிக அதிக அளவில் உயிர் சேதமும், பயிர் சேதமும் ஏற்படுகிறது.

மக்கள் பாதிப்பு

நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வெளியேறும் சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட நச்சு வாயுக்கள், நிலக்கரிதுத்துகள் ஆகியவை காற்றில் பரவுவதால் காற்று மாசடைந்து ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நுரையீரல் நோய் போன்றவை ஏற்படுகின்றன. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

காலநிலை மாற்றத்தை உருவாக்கும் கரியமில வாயுவை வெளியேற்றுவதற்கு முதல் காரணமாக இருப்பவை நிலக்கரி சுரங்கங்களும், அனல்மின் நிலையங்களும் தான். உலகின் ஒட்டுமொத்த கரியமில வாயு வெளியேற்றத்தில் 36 சதவீதம் அளவுக்கு இவையே காரணம். புவி வெப்பமயமாதலுக்கு என்.எல்.சி. பெருமளவில் பங்களிக்கிறது. அதனால் என்.எல்.சி. நிறுவனம் வெளியேற்றப்பட வேண்டும்.

தாது அறக்கட்டளை

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிறுவனத்தால் பழுப்பு நிலக்கரி மற்றும் பிற தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதால், கடலூர் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதியாக கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளையால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதை மத்திய அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது.

கடலூர் மாவட்டத்தின் உத்தேச மக்கள்தொகை இன்றைய நிலையில் சுமார் 30 லட்சம் ஆகும். என்.எல்.சி. நிறுவனத்தால் ஏற்படுத்தப்படும் சுற்றுச்சூழல் கேடுகளும், வாழ்வாதார பாதிப்புகளும், நிலப்பறிப்பு மற்றும் உழைப்புச்சுரண்டலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களையும் பாதிக்கின்றன. என்.எல்.சி. நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 லட்சம் மக்களும் ஏதேனும் ஓர் உடல்நல பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதனால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது.

விவசாய நிலங்களை பறிக்கக்கூடாது

என்.எல்.சி. நிறுவனம் 60 ஆண்டுகளுக்கு முன் மிகவும் சாதாரணமாகத்தான் தொடங்கப்பட்டது. இப்போது ஆண்டுக்கு ரூ.11,592 கோடி வருவாய் ஈட்டும் என்.எல்.சி., தமிழ்நாட்டில் முதலீடு செய்யாமல், ராஜஸ்தான், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தான் முதலீடு செய்கிறது.

இப்படியாக, கடலூர் மாவட்டத்திற்கும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் எந்த வகையிலும் பயன்படாத, கடலூர் மாவட்டத்திற்கு பெருந்தீமைகளை மட்டுமே கொடுக்கும் என்.எல்.சி. நிறுவனத்திற்காக விவசாயிகளின் நிலங்களை பறிக்கக்கூடாது. என்.எல்.சி.யை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் கடலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

அவர்களின் எதிர்பார்ப்பை தாங்கள் நிறைவேற்ற வேண்டும். என்.எல்.சி. நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் பறிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story