என்.எல்.சி. சுரங்க விரிவாக்கம்: 1,000 போலீஸ் பாதுகாப்புடன் 4-வது நாளாக வாய்க்கால் வெட்டும் பணி தீவிரம்
என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்காக 1,000 போலீஸ் பாதுகாப்புடன் 4-வது நாளாக வாய்க்கால் வெட்டும் பணி தீவிரமாக நடந்தது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு 3 திறந்தவெளி சுரங்கங்கள் அமைத்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல்மின்நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்து தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது. நிலக்கரி தட்டுப்பாட்டால் 2-வது சுரங்க விரிவாக்க பணியை என்.எல்.சி. நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது. இதற்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி, கத்தாழை, கரிவெட்டி, ஆதனூர், மும்முடிசோழகன் உள்ளிட்ட கிராமங்களில் ஏற்கனவே கையகப்படுத்தி இருந்த விளைநிலங்களில் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்திருந்தனர். அதனை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்து புதிய பரவனாற்றுக்கு வாய்க்கால் வெட்டுதல் மற்றும் கரிவெட்டி கிராமத்துக்கு சாலை அமைத்தல் ஆகிய பணிகளை கடந்த 26-ந் தேதி முதல் என்.எல்.சி. மேற்கொண்டு வருகிறது.
4-வது நாளாக பணி
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 28-ந் தேதி என்.எல்.சி. அலுவலகத்தை பா.ம.க. சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அன்றைய தினம் மட்டும் வாய்க்கால், சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு நேற்று முன்தினம் முதல் என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணி மீண்டும் தொடங்கியது.
நேற்று 4-வது நாளாக சுரங்க விரிவாக்கத்திற்காக வாய்க்கால் வெட்டும் பணியும், சாலை அமைக்கும் பணியும் நடந்தது. ஏற்கனவே பா.ம.க. மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் திருப்பத்தூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம் தலைமையில் 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 16 இன்ஸ்பெக்டர்கள், 1,052 போலீசார் சுரங்க விரிவாக்க பணி நடைபெறும் பகுதிகளிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.