என்.எல்.சி. அதிகாரி வீட்டில் புள்ளிமான் தோல், கொம்புகள் பறிமுதல்


என்.எல்.சி. அதிகாரி வீட்டில் புள்ளிமான் தோல், கொம்புகள் பறிமுதல்
x

நெய்வேலி என்.எல்.சி. அதிகாரி வீட்டில் புள்ளிமான், கொம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. நட்சத்திர ஆமைகள், கிளியும் மீட்கப்பட்டன.

கடலூர்

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. அதிகாரி ஒருவரது வீட்டில் புள்ளிமான், கொம்புகள் பதுக்கி வைத்திருப்பதாக சென்னை வன உயிரின கட்டுப்பாட்டுக்குழுவுக்கு புகார்கள் சென்றது.

இது பற்றி அறிந்ததும் அந்த குழுவினர் மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் அறிவுரையின்பேரில் கடலூர் வனச்சரக அலுவலர் (பொறுப்பு) கமலக்கண்ணன், வனவர் குணசேகரன், வன காப்பாளர் தணிகாசலம் மற்றும் வனத்துறையினர் உதவியோடு நேற்று முன்தினம் நெய்வேலி சென்றனர்.

பின்னர் இந்திராநகரை சேர்ந்த என்.எல்.சி. அதிகாரி ஸ்ரீதர் (வயது 54) என்பவர் வீட்டில் அதிரடியாக சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் புள்ளிமான் தோல்-1, மான்கொம்புகள் -4, உயிருடன் இருந்த 2 நட்சத்திர ஆமைகள், ஒரு பச்சைக்கிளி ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

பறிமுதல்

இதையடுத்து அவரிடம் இருந்து மான் தோல், கொம்புகள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். உயிருடன் இருந்த நட்சத்திர ஆமைகள், கிளி ஆகியவற்றையும் மீட்டனர். இவற்றை எங்கிருந்து, யாரிடம் இருந்து வாங்கினார் என்று வனத்துறையினர் அவரிடம் விசாரித்தனர்.

விசாரணையில், மான் தோலை வடலூரில் இருந்து ஒருவரிடம் விலைக்கு வாங்கியதாகவும், மற்றவைகளை ரோட்டில் சென்ற போது, சாலையில் கிடந்து எடுத்ததாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் ஸ்ரீதர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இருப்பினும் என்.எல்.சி. அதிகாரி வீட்டில் மான் தோல், கொம்புகள் உள்ளிட்டவை மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story