என்.எல்.சி. நிறுவனத்தை வெளியேற்றும் நடவடிக்கையில் அரசு இறங்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ்


என்.எல்.சி. நிறுவனத்தை வெளியேற்றும் நடவடிக்கையில் அரசு இறங்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ்
x

என்.எல்.சி.க்காக கடலூர் மாவட்ட விவசாயிகளை அச்சுறுத்தி நிலங்களை பறிப்பதை அரசு கைவிட வேண்டும், என்.எல்.சி.யை வெளியேற்ற வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

நெய்வேலியில் உள்ள அனல் மின் நிலையங்களில் பழுப்பு நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், அதனால், 1000 மெகாவாட் அளவுக்கு மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதாகவும் என்.எல்.சி நிறுவனத்தின் தலைவர் பிரசன்னகுமார் தெரிவித்திருக்கிறார்.

என்.எல்.சி தலைவரின் இந்தக் கருத்து உள்நோக்கம் கொண்டது என்றாலும் கூட, என்.எல்.சி. நிறுவனத்தை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றினால் கூட, அதனால் தமிழ்நாடு இருண்டுவிடாது என்பதை தம்மையும் அறியாமல் அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

மின்னுற்பத்திக்காக விவசாயிகளின் நிலங்களை பறிக்க வேண்டும் என்பதே மனித நேயமற்ற கொள்கையாகும். தமிழ்நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஏராளமான வழிமுறைகள் உள்ளன. எரிவாயு மின்சாரம், உயிரி வாயு மின்சாரம், காற்றாலை மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம், நீர் மின்சாரம், கடல் அலை மின்சாரம், கழிவுகள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் என பல வழிகளில் மின்சாரம் தயாரிக்க முடியும்.

ஆனால், உணவு தயாரிக்க ஒரே வழி தான் உள்ளது. நிலங்களில் விவசாயம் செய்து உணவு தானியங்களை உற்பத்தி செய்தால் தான் மக்கள் பசியின்றி வாழ முடியும். எனவே, விவசாய நிலங்களை அழித்து மின்சாரம் தயாரிக்கும் கொள்கை மனிதகுலத்திற்கு எதிரானது; அது கைவிடப்பட வேண்டும்.

பொய் தோற்றம்

நிலக்கரி பற்றாக்குறை காரணமாகத் தான் நெய்வேலியில் உள்ள அனல் மின்நிலையங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது அப்பட்டமான பொய். என்.எல்.சி.யிடம் தேவைக்கு அதிகமாகவே நிலமும், நிலக்கரியும் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை என்.எல்.சி. அனல் மின்நிலையங்கள் பராமரிப்புக்காக மூடப்படுவது வழக்கம். அதேபோல் தான் இப்போதும் மூடப்பட்டுள்ளன. என்.எல்.சியில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பே இல்லை.

கடலூர் மாவட்ட மக்கள் செய்த தியாகத்தில் தான் என்.எல்.சி. தலைவரும், மற்றவர்களும் கொழிக்கின்றனர். ஆனால், அந்த நன்றி உணர்வே இல்லாமல் தியாகிகளாக போற்றப்பட வேண்டிய கடலூர் மாவட்ட மக்களை துரோகிகளாக சித்தரிக்க என்.எல்.சி. தலைவர் முயல்வதை மன்னிக்க முடியாது. என்.எல்.சி.யை நம்பித் தான் தமிழ்நாடு உள்ளது என்பது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த பிரசன்னகுமார் முயலக் கூடாது.

கைவிட வேண்டும்

சொந்த மண்ணின் விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டு, என்.எல்.சி நிறுவனத்தை தமிழ்நாடு அரசு சுமந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. தமிழகத்தின் அமைச்சர்கள் அந்த நிறுவனத்தின் முகவராக பணி செய்யத் தேவையில்லை. என்.எல்.சி. நிறுவனத்தால் விவசாயிகளுக்கும், இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும், மக்களின் நலவாழ்வுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல்வேறு தருணங்களில் விரிவாக பட்டியலிட்டிருக்கிறேன்.

எனவே, என்.எல்.சி.க்காக கடலூர் மாவட்ட விவசாயிகளை அச்சுறுத்தி நிலங்களை பறிப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; அந்த நிறுவனத்தை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story