என்.எல்.சி. சுரங்கத்தில் லாரி-வேன் மோதல்: வடமாநில தொழிலாளர்கள் 13 பேர் படுகாயம்
என்.எல்.சி. சுரங்க பகுதியில் லாரி-வேன் மோதிக்கொண்ட விபத்தில் வடமாநில தொழிலாளர்கள் 13 பேர் படுகாயடைந்தனர்.
மந்தாரக்குப்பம்,
லாரி-வேன் மோதல்
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 2-வது நிலக்கரி சுரங்கம் மந்தாரக்குப்பம் பகுதியில் அமைந்துள்ளது. வழக்கமாக இங்கு பணிக்கு வரும் தொழிலாளர்கள் சுரங்க நுழைவாயில் பகுதியில் இருந்து சிறிய ரக வேன்(பிக்அப்வேன்) மூலம் சுரங்க பகுதிக்குள் அழைத்து செல்லப்படுவார்கள்.
அந்த வகையில் நேற்று முதற்கட்ட பணிக்கு சென்ற தொழிலாளர்களில் 13 பேரை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் சுரங்க பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, சுரங்கத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று எதிரே வந்து கொண்டு இருந்தது. வேன் மற்றும் லாரி அருகருகே வந்த போது எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டது.
13 பேர் படுகாயம்
இதில் வேனில் இருந்த 13 தொழிலாளர்களும் படுகாயமடைந்தனர். உடன் அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததால், அவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வடமாநில தொழிலாளர்கள்
இந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளர்கள் அனைவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் என்.எல்.சி.யில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வரும் ஒரு தனியார் நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சுரங்கப்பகுதியில் நடந்த இந்த விபத்து காரணமாக, அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.