விழுப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாததால் கர்ப்பிணி வயிற்றுக்குள்ளே குழந்தை பலி கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் புகார் மனு


விழுப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாததால் கர்ப்பிணி வயிற்றுக்குள்ளே குழந்தை பலி    கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் புகார் மனு
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாததால் கர்ப்பிணி வயிற்றுக்குள்ளே குழந்தை இறந்து விட்டதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் புகார் மனு அளித்தனர்.

விழுப்புரம்


விழுப்புரம் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நகர செயலாளர் ஜாபர்அலி மற்றும் உறவினர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் நகராட்சி கீழ்பெரும்பாக்கத்திற்கான அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மகாராஜபுரத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, எனது சகோதரர் ஜாகீர்உசேன் மனைவி பர்ஜானாபானு என்பவர் பிரசவ வலி ஏற்பட்டு அந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த 6-ந் தேதி வலி வருவதற்கான ஊசி மற்றும் மருந்து அங்குள்ள செவிலியரால் கொடுக்கப்பட்டது. பின்னர் மதியம் 2 மணியளவில் அவசர சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுமாறு கூறினார்கள். ஏன் என்று கேட்டபோதுதான், டாக்டர்கள் இங்கு இல்லை என்பதையே தெரிவித்தனர்.

அலட்சியம்

ஆம்புலன்சு வந்த பிறகும் டிஸ்சார்ஜ் விவரங்களை கொடுக்க அலட்சியமாகவும், காலதாமதமாகவும் வழங்கி சுமார் 4 மணிக்கு அனுப்பி வைத்தார்கள்.

பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் டாக்டர்கள் பரிசோதனையில் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சிறிது நேரத்திற்கு முன்னதாக அழைத்து வந்திருந்தால் குழந்தையை காப்பாற்றி யிருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லாததாலும், செவிலியர்களின் அலட்சியத்தினாலும் குழந்தை இறந்துவிட்டது.

எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் அலுவலக அதிகாரிகள், இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர்.


Next Story