சென்னை-மும்பை ரெயிலில் தீ ஏற்படவில்லை; புகை மட்டுமே வெளியேறியது - தெற்கு ரெயில்வே விளக்கம்
புகை அணைக்கப்பட்டு ரெயில் மீண்டும் இயங்க தொடங்கியதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னையில் இருந்து மும்பை செல்லக் கூடிய லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை பேசின் பிரிஜ் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ரெயிலின் எஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்ட 15 நிமிடங்களுக்குள் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்ட நிலையில், பயணிகள் அலறியடித்துக் கொண்டு ரெயிலில் இருந்து இறங்கி வெளியே ஓடி வந்தனர். இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உயர் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட உரசல் காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தெற்கு ரெயில்வே விளக்கமளித்துள்ளது. அதில் சென்னையில் இருந்து மும்பை புறப்பட்ட லோக்மான்ய திலக் ரெயிலில் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை என்றும் ஹாக் (HOG) கப்ளரில் ஏற்பட்ட பிரச்சினையால் புகை மட்டுமே வெளியே வந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது புகை அணைக்கப்பட்டு விட்டதால் ரெயில் மீண்டும் இயங்க தொடங்கியதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.