உழைப்பால் உயர்ந்த அதிமுக-வை யாராலும் அழிக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி
காற்றுக்கு தடைபோட முடியாததை போல அதிமுகவின் வளர்ச்சிக்கு ஒருபோதும் தடைபோட முடியாது என கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை,
சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு கட்டண உயர்வை அமல்படுத்திய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
ஆட்சிக்கு வந்து திமுக அரசு என்ன செய்துள்ளது. அனைத்து வரிகளையும் உயர்த்தியுள்ளது. மின்கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி ஏழை எளிய மக்களை பாதிப்புக்குள்ளக்கி இருக்கிறது. மேலும், அனைத்து வரிகளையும் உயர்த்தியுள்ளது.
உழைப்பால் உயர்ந்த அதிமுக-வை எந்த கொம்பனாலும் அழிக்கவோ, ஒடுக்கவோ முடியாது. எப்போதெல்லாம் அதிமுக-வை திமுக அழிக்க பார்க்கிறதோ, அப்போதெல்லாம் அதிமுக வீறுகொண்டு எழுந்து ஆட்சியை பிடித்த வரலாறு உண்டு.
தமிழகத்தில் மீண்டும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியை கொண்டு வருவோம். நான் ஆட்சிக்கு வரும்போது மூன்று மாதத்தில், ஐந்து மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று ஆரூடம் கூறினார்கள். ஆனால் தமிழகத்திற்கு சிறப்பான ஆட்சியை தந்தேன்.
எத்தனை வழக்குகள் போட்டாலும் துணிவுடன் எதிர்கொள்ளும் சக்தி கொண்ட இயக்கம் அ.இ.அ.தி.மு.க. ஆகும். மக்களுக்கு நன்மை செய்யாமல் அதிமுக-வை பழிவாங்கும் நோக்கில் செயல்படும் விடியா திமுக அரசு, அதற்கான பலனை அனுபவிக்கும்.
காற்றுக்கு தடைபோட முடியாததை போல அதிமுகவின் வளர்ச்சிக்கு ஒருபோதும் தடைபோட முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.