தமிழக அரசுக்கு யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது


தமிழக அரசுக்கு யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கவர்னரை கண்டு பயம் இல்லை என்றும், தமிழக அரசுக்கு யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது என்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

கவர்னரை கண்டு பயம் இல்லை என்றும், தமிழக அரசுக்கு யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது என்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கூறியுள்ளார்.

நெருக்கடி கொடுக்க முடியாது

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கவர்னர் பதவி என்பது மாநிலங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. மாநில அரசு இயற்றுகின்ற சட்டங்கள் சட்டத்திற்குட்பட்டு இருக்கிறதா? என்பதை பார்க்க வேண்டும். எனவே தான் அவர்களுக்கு மாநிலத்தின் முதல் குடிமகன் என்ற அந்தஸ்து இருக்கிறது. கவர்னர்கள் அரசியல் கட்சியை சாராதவர்களாக இருக்க வேண்டும்.

எங்களது கேள்வி எல்லாம் அந்த உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு மாண்பை, மரியாதையை கெடுக்கின்ற விதத்தில் செயல்படுகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. தமிழக அரசுக்கு யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது. ஏனென்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மகத்தான அரசு சிறந்த முறையில் ஆட்சி செய்து வருகிறது.

கபட நாடகம்

தமிழக வரலாறு என்பது ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையிலானது. ஒரு சனாதனத்தை கட்டமைக்க ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கடமை இருக்கிறது. அதை செய்வது தான் தர்மம் என்று பா.ஜனதா தலைவர் கூறுகிறார். தமிழக மக்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தமிழ் மொழியை காப்போம் என்று பா.ஜனதா போராட்டம் நடத்துவது ஒரு மாயை ஆகும். பிரதமர் சில இடங்களில் திருக்குறள் பற்றி பேசுகிறார். 22 மாநில மொழிகளையும் அரசியல் சட்டம் அங்கீகரித்து இருக்கிறது.

130 கோடி மக்கள் வாழுகின்ற இந்தியாவில் 22 ஆட்சி மொழிகள் இருக்க முடியுமா? என்று கேட்டால் 100 சதவீதம் இருக்க முடியும். சிங்கப்பூரில் சில லட்சம் மக்கள்தான் உள்ளார்கள். அங்குள்ள 4 மொழி ஆட்சி மொழியில் உள்ளது. எனவே இந்தியாவில் தமிழை ஆட்சி மொழியாக்குவதில் என்ன பிரச்சினை இருக்கிறது. பா.ஜனதாவினர் கபட நாடகம் போடுகிறார்கள்.

வெள்ளை அறிக்கை

என்.ஐ.ஏ. என்பது தேசத்தில் உள்ள உச்சகட்டமான ஒரு புலனாய்வு அமைப்பு. அந்த அமைப்பு மாநில அரசுக்கு அறிக்கை அளித்ததாகவும், அந்த அறிக்கை தனக்குத் தெரியும் என்றும் ஒருவர் பகிரங்கமாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்படி என்றால் மத்திய அரசு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது தானே. தேசிய புலனாய்வு அமைப்பின் அறிக்கை நகல் பா.ஜனதாவுக்கு அனுப்பப்படுகிறதா?.

குஜராத்தில் தற்போது நடைபெற்ற சம்பவத்தை போன்று மேற்கு வங்க தேர்தலுக்கு முன்பு அங்கும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது. அப்போது பிரதமர் கூறியபோது, கடவுள் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் அரசு இருப்பதை விரும்பவில்லை என்றார். அப்படி என்றால் குஜராத்தில் தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் குஜராத்தில் பா.ஜனதா அரசு இருக்கக்கூடாது என்பதற்கான அறிகுறியா?. அதனை அவர் ஏற்றுக் கொள்வாரா?.

கவர்னரை கண்டு பயமில்லை

பா.ஜனதா அரசு இல்லாத மற்ற மாநிலங்களில் கவர்னர்கள் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். எங்களுக்கு கவர்னரை கண்டு பயம் எதுவும் இல்லை. ஆனால் ஒரு ஜனநாயக அமைப்பை சிதைத்து விடக்கூடாது என்பது தான் தி.மு.க.வின் நிலைப்பாடு.

இவ்வாறு மனோதங்கராஜ் கூறினார்.


Next Story