யாரும் பதற்றம் அடைய வேண்டாம் வக்பு வாரிய நிலங்கள் மறு அளவீடு செய்யப்படும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி


யாரும் பதற்றம் அடைய வேண்டாம் வக்பு வாரிய நிலங்கள் மறு அளவீடு செய்யப்படும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
x

வக்பு வாரிய நிலங்கள் மறு அளவீடு செய்யப்படும். அதனால் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

திருச்சி

வக்பு வாரிய நிலங்கள் மறு அளவீடு செய்யப்படும். அதனால் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

முறைப்படி...

தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலை நிமித்தமாக திருவாரூரை சேர்ந்த முத்துக்குமரன் வெளிநாடு சென்று அங்கு உயிரிழந்து இருப்பது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அயலக தமிழர்களுக்கான துறை இருக்கிறது. அங்கு வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் முறைப்படி பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும். அதற்காகத்தான் இந்த துறை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அயலக தமிழர்களுக்கான துறை

வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்றவர்களில் கடந்த ஆண்டில் 152 பேரும், இந்த ஆண்டு 116 பேரும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் உடலை மீட்டு கொண்டு வந்துள்ளோம். அதேபோல் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று கடந்த ஆண்டு 315 பேரும், இந்த ஆண்டு 311 பேரும் கோரிக்கை வைத்து இருந்தனர். அவர்களை நாங்கள் அழைத்து வந்துள்ளோம்.

அயலக தமிழர்களுக்கான துறையின் மூலமாக 181 பேரை குறுகிய கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளிநாட்டிற்கு பணிக்காக அனுப்பி வைத்துள்ளோம். இங்கிலாந்தில் இருந்து செவிலியர் பணிக்காக 500 பேர் கேட்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் 481 பேர் பதிவு செய்து வேலைக்கு செல்ல தயாராக உள்ளனர்.

உக்ரைனில் போர் காரணமாக மருத்துவப்படிப்பை பாதியிலேயே விட்டு வந்த மாணவர்களை மருத்துவப்படிப்பில் தமிழகத்தில் சேர்ப்பதற்கு நீட் ஒரு தடையாக உள்ளது. பொறியியல், வேளாண்மை படிப்பை பாதியிலே விட்டு உக்ரைனிலிருந்து வந்த மாணவர்கள் தமிழக கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என முதல்-அமைச்சர் கூறி உள்ளார். ஆனால் மருத்துவப்படிப்பில் சேர்க்க முடியாத நிலை நீட்டால் உள்ளது. எனவே அந்த மாணவர்களுக்கும் உரிய மருத்துவப்படிப்பு இங்கேயே வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டுள்ளார்.

மறுஅளவீடு

வக்பு வாரிய நிலம் தொடர்பாக பல்வேறு இடங்களில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மீண்டும் மறு அளவீடு செய்ய வக்பு வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அளவீடு செய்து ஆய்வு செய்த பின்பு உரிய தீர்வு எட்டப்படும். இந்த விவகாரத்தில் யாரும் பதற்றம் அடைய தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story