10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை


10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை
x
திருப்பூர்

மடத்துக்குளம்:

மடத்துக்குளம் அருகே துங்காவி ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாகவும் இதனால் நீண்ட நாட்கள் குடிநீர் செய்யவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

குடிநீர் வினியோகம் இல்லை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் துங்காவி ஊராட்சியில் தாமரைப்பாடி, உடையார்பாளையம், சீலநாயக்கன்பட்டி, பாறையூர், துங்கா வி, பெங்களூர், குமாரமங்கலம், மலையாண்டிபட்டினம், வெங்கட்டாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன.

உடையார்பாளையத்தில் உள்ள கீழ் நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் திருமூர்த்திமலை கூட்டு குடிநீர் திட்ட தண்ணீரை தேக்கி வைத்து, பின் மின்மோட்டார் பயன்படுத்தி மேற்குறிப்பிட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்த பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் முறையாக செய்யப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

மின்மோட்டார் பழுது

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

மடத்துக்குளம் ஒன்றியம் துங்காவி ஊராட்சியில் 10 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை. போதிய குடிநீர் வினியோகம் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது கோடைகாலம் ஆதலால் குடிநீரின் தேவை அதிகமாக உள்ளது. அதனால் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. வசதியில்லாதவர்கள் நீண்ட தொலைவில் உள்ள தனியார் கிணறுகள், ஆழ்குழாய்கள் ஆகியவற்றிலிருந்து நீரை சேமித்து எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர். இதனால் பலவித சிரமம் ஏற்படுகிறது" இவ்வாறு தெரிவித்தனர்.

இதுகுறித்து துங்காவி ஊராட்சி தலைவர் உமாதேவி காளீஸ்வரன் கூறியதாவது:- உடையார்பாளையம் நீர்தேக்க தொட்டியில் உள்ள மின்மோட்டார் பழுதாகி ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது. ஆனால் இதுவரை சரி செய்யப்படவில்லை. பழுது நீக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மிகவும் மெத்தனமாக உள்ளனர். இவர்களின் அலட்சியத்தால் மாதம் தோறும் இதே நிலைமை ஏற்படுகிறது. இதுகுறித்து அரசு நடவடிக்கை மேற்கொண்டு உரிய அதிகாரிகளை நியமனம் செய்து, சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் "என தெரிவித்தார்.


Next Story