சாயக்கழிவு நீர் திறந்து விடப்பட்டதால் நிறம்மாறிய நொய்யல் ஆறு


சாயக்கழிவு நீர் திறந்து விடப்பட்டதால் நிறம்மாறிய நொய்யல் ஆறு
x

சாயக்கழிவு நீர் திறந்து விடப்பட்டதால் நிறம்மாறிய நொய்யல் ஆறு

திருப்பூர்

வீரபாண்டி

திருப்பூர் குப்பாண்டபாளையம் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகளை கலந்து விடும் டையிங் மற்றும் பிரிண்டிங் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நொய்யல் ஆறு

திருப்பூர் பின்னலாடை துறையின் அங்கமாக உள்ள சாய ஆலைகள், பிரிண்டிங், வாஷிங் நிறுவனங்கள், மாசுக்கட்டுப்பாடு வாரிய அனுமதி பெறவேண்டும். கழிவுநீரை, ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில் நுட்பத்தில் சுத்திகரிக்க வேண்டும் என்பது விதிமுறை உள்ளது. ஆயினும் முறைகேடு நிறுவனங்கள் எண்ணிக்கை குறையவில்லை. குடோன்கள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில், பிளாஸ்டிக் டிரம் வைத்து பட்டன், ஜிப் போன்றவற்றுக்கு சாயமேற்றுகின்றனர். சுத்திகரிக்காத சாயக்கழிவுநீர், நீர்நிலைகளில் திறந்து விடப்பட்டு, இயற்கை பாழ்படுத்தப்படுகிறது.

மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பயந்து, முறைகேடு நிறுவனங்கள், சாயக்கழிவுநீரை இரவு நேரங்களில் ரகசியமாக திறந்து விடுகின்றன. இதனால் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவர் லோகநாதன் கூறியதாவது:- குப்பாண்டபாளையம் பகுதியை சுற்றியும் பிரிண்டிங், சாய ஆலைகள் பல உள்ளன. இவர்கள் தங்கள் நிறுவனங்களில் இருந்து சாயக்கழிவுகளை சுத்திகரிப்பு செய்யப்படாமல் அப்படியே ஆற்றில் கலந்து விடுகின்றனர். இதனால் நிலத்தடி நீர் மற்றும் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. நொய்யல் ஆற்றில் ஒவ்வொரு முறையும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது ஒவ்வொரு முறையும் திருப்பூரில் உள்ள 500-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளில் தேக்கி வைத்திருக்கும் சாயக்கழிவு நீரை திறந்து விடுகின்றனர். இதனால் நொய்யல் ஆறு நிறம் மாறிப்போனது.

பயிர்கள் பாதிப்பு

இதனால் தண்ணீரில் உள்ள உப்புத்தன்மை அதிகரித்துள்ளதால் அதை பாசனத்திற்கு பயன்படுத்தும் போது பயிர்கள் காய்கின்றன. நொய்யல் ஆற்றில் வரும் மழைநீர் சாயக்கழிவு நீருடன் வருவதால் விவசாயம் செய்ய உகந்த தண்ணீர் அல்ல. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து திருப்பூர் சாயக்கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story