செயல்படாத சிக்னல்கள்... திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்...
செயல்படாத சிக்னல்களால் சிதம்பரம் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடுகிறாா்கள்.
உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் சிதம்பரம் நகரில் அமைந்துள்ளது. மேலும் சிதம்பரம் அருகிலேயே சுற்றுலா தலமான பிச்சாவரம் சதுப்பு நில காடுகளும் உள்ளன. இதனால் சிதம்பரம் நகருக்கு வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த சிதம்பரம் நகரில் எந்நேரமும் வாகன நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாக பகல் முழுவதும் நகரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் நகரமே ஸ்தம்பித்து விடுகிறது.
தொடர் கதை
காரணம், நகரில் முக்கிய சந்திப்புகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட அனைத்து சிக்னல்களும் செயல்படாமல் காட்சிப் பொருளாகவே உள்ளன. மேலும் பெரும்பாலான இடங்களில் தானியங்கி சிக்னல் இருந்தும், அவையும் செயல்படவில்லை.சிக்னல்கள் செயல்பட்டாலே விதிமுறைகளை கடைபிடிக்காத வாகன ஓட்டிகள், செயல்படாத சிக்னல்களால் நகரில் தங்களது இஷ்டம்போல் தாறுமாறாக வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். இதனால் நகரில் தினசரி வாகன விபத்துகள் நடப்பது, தொடர் கதையாக உள்ளது.
போக்குவரத்து நெரிசல்
மேலும் முக்கிய சந்திப்புகளில் உள்ள சிக்னல்கள் இயங்காததாலும், சில இடங்களில் சிக்னல் அமைக்கப்படாததாலும் வாகன ஓட்டிகளுக்கு எந்த திசையில் இருந்து வரும் வாகனங்கள் முதலில் செல்வது என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. ஒரே நேரத்தில் நான்கு திசைகளில் இருந்து வரும் வாகனங்களும் எதிரும், புதிருமாக செல்வதால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி வருகின்றனர். இதனால் காலை, மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதில் வாகன ஓட்டிகள் சற்று கவனம் தவறினாலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதேபோல் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கும் சிரமப்படுகின்றனர்.
நடவடிக்கை
இந்த போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய முடியாமல் போலீசாரும் திண்டாடி வருகின்றனர். இதனால் மாணவ-மாணவிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி, கல்லூரி செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர்.
எனவே, சிதம்பரம் நகர முக்கிய சந்திப்பு மற்றும் வீதிகளிலும், நகரின் பிற இடங்களிலும் பழுதான போக்குவரத்து சிக்னல்களை சரி செய்ய போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிக்னல்களை சரிசெய்ய...
இதுகுறித்து சிதம்பரம் நகர மக்கள் கூறுகையில், வளர்ந்து வரும் நகரங்களில் போக்குவரத்து சிக்னல்கள் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் கடந்த பல ஆண்டுகளாக சிதம்பரம் நகரில் போக்குவரத்து சிக்னல்கள் இயங்காமல் உள்ளது. இதனால் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் நடப்பது தொடர் கதையாகி வருகிறது.இதனால் சிதம்பரம் நகருக்குள் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கதறுகின்றனர். ஆகவே நகரில் உள்ள அனைத்து போக்குவரத்து சிக்னல்களையும் சரிசெய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.