குற்ற சம்பவங்கள் நடப்பதற்கு வடஇந்தியர்கள் தான் காரணம்


குற்ற சம்பவங்கள் நடப்பதற்கு வடஇந்தியர்கள் தான் காரணம்
x

தமிழ்நாட்டில் குற்ற சம்பவங்கள் நடப்பதற்கு வட இந்தியர்கள்தான் காரணம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

ராணிப்பேட்டை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வாலாஜாவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நெருக்கடியாக

மதத்தை வைத்து மனிதத்தை அளவிடுகிற போக்கு இந்திய நிலத்தில் தான் இருக்கிறது. உலகத்தில் எங்கும் அப்படி கிடையாது. மொழி வழியில் தான் தேசிய இனங்கள், நிலங்கள் உலகம் முழுவதும் உள்ளது. இங்கு தான் மதத்தை வைத்து சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என கூறுகின்றனர்.

இஸ்லாமிய மக்களை எதிர்ப்பதை தவிர, பா.ஜ.க.வுக்கு வேறு கோட்பாடு, கொள்கை எதுவும் கிடையாது. ஈரோடு இடைத்தேர்தலில் மத்தியில் ஆண்டு கொண்டிருக்கிற பா.ஜ.க.வுக்கும், தமிழகத்தில் ஆள்கின்றவர்களுக்கும் இடையூறாக, நெருக்கடியாக நாம் இருப்பதாக உணர்கிறார்கள். என்னுடைய சின்னம் மக்கள் மனதில் பதிவாகிவிட்டது.

நான் இருக்கும் வரை முடியாது

நான் இருக்கும் வரை 8 வழி சாலை போட முடியாது. பரந்தூர் விமான நிலையம் கட்ட முடியாது. சிப்காட் தொழிற்சாலைகள் தொடங்க முடியாது. அவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கலாம், கட்டுங்கள் பார்ப்போம். இருக்கின்ற விமான நிலையத்தில் பறக்க விமானம் இருக்கிறதா?. விமான நிலையத்தை எங்கு வேண்டுமானாலும் உருவாக்கலாம். விளை நிலத்தை உருவாக்க முடியுமா?. எதிர்காலத்தை கணிக்கின்ற நீங்க ஏன் ஆற்று மணலை விற்கிறீர்கள். மலையை உடைக்கிறீர்கள்.

வட மாநிலத்தவர்கள் எப்படி ரெயில்களில் தொடர்ச்சியாக வருகிறார்களோ, நான் வந்தால் அதே மாதிரி இரண்டு மாதத்தில் போய்விடுவார்கள். என்னுடைய மக்களுக்குள்ளே ஒரு உளவியல் நோயை உருவாக்கியது இந்த திராவிட கட்சிகள் தான். இலவசம், மதுவை கொடுத்து உழைக்கின்ற திறனற்று போனார்கள். உழைப்பின் தேவை இருக்கு, அதனால்தான் வட இந்தியர்கள் குறைந்த கூலிக்கு வேலைக்கு வருகிறார்கள்.

வட இந்தியர்கள்தான் காரணம்

வடஇந்தியர்களை உழைப்பதற்கு ஈடுபடுத்தி பழகிவிட்டால் பிறகு அவர்களை தவிர்க்க முடியாது. பிறகு 500 ரூபாய்க்கு வேலை செய்தவன் 5,000 ரூபாய் கேட்பான். எனக்கு வாக்கு செலுத்தி என்னை ஆட்சியில் உட்கார வையுங்கள், நான் நாட்டை பார்த்து கொள்கிறேன். நீங்கள் வீட்டில் நிம்மதியா உறங்குங்கள். குற்ற சம்பவ நிகழ்வுகள் அதிகமாக நடப்பதற்கு காரணம் வடஇந்தியர்கள் தான். உயர் காவல்துறை அதிகாரிகள் முதல்வரிடம் சமர்ப்பித்த அறிக்கையில் இதுதான் உள்ளது. நகை பறிப்பு, கஞ்சா விற்பது வட இந்தியர்கள் தான்.

திராவிட மாடல் ஆட்சி என்பது எங்களுக்கான அரசு இல்லை. மொழி, இனம், நிலம், மக்களின் நலன், எதிர்காலத்திற்கான அரசு இல்லை. ஒரு குடும்பம் வாழ்வதற்கும், ஆட்சி செய்வதற்கும் நாமெல்லாம் கூடி உழைக்கிறோம், ஓட்டு போடுகிறோம். அதற்கு நாம் வெட்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மாற்று கட்சியினர் சீமான் முன்னிலையில், நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். அப்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


Next Story