தென்னை சார்ந்த தொழில்களில் வடமாநில தொழிலாளர்கள் ஆதிக்கம்
உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில் தென்னை சார்ந்த தொழில்களில் அதிக அளவில் வெளி மாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதால் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வாழ்வாதாரம்
உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனால் அதனை சார்ந்து தேங்காய் மற்றும் இளநீர் பறித்தல், தேங்காய் உரித்தல், தென்னை நார் உற்பத்தி, கொப்பரை உற்பத்தி உள்ளிட்ட தொழில்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சமீப காலங்களாக இந்த பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறி படிப்படியாக வட மாநிலத் தொழிலாளர்களை பலரும் வேலைக்கு அமர்த்தத் தொடங்கியுள்ளனர். இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி வேண்டும் என்று உள்ளூர்த் தொழிலாளர்கள் உடுமலை ஆர்.டி.ஓ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:- உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் முழுமையாக இந்த தொழிலையே நம்பி உள்ளன.ஆனால் சமீப காலங்களில் குறைந்த கூலியில் வேலை செய்ய வட மாநிலத் தொழிலாளர்கள் முன்வருவதால் பலரும் அவர்களை வேலைக்கு அமர்த்தி வருகின்றனர்.
போராட்டம்தென்னை சார்ந்த தொழில்களில் வடமாநில தொழிலாளர்கள் ஆதிக்கம்
யார், என்ன என்று தெரியாமல் யார் யாரையோ பணியில் அமர்த்தும் போது அவர்களுக்கு மட்டுமல்லாமல் அருகிலுள்ள மற்றவர்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை ஏற்படுகிறது. அத்துடன் உள்ளூர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கோரி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டோம். ஆனால் போலீசாரிடம் கேட்டால் ஆர்டிஓவிடம் அனுமதி பெற வேண்டும் என்கிறார்கள். ஆர்டிஓ போலீசாரிடம் தான் அனுமதி பெற முடியும் என்கிறார். எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்குக் கூட வழியில்லாத நிலை உள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணக் கோரி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் சாலையில் அமர்ந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஒட்டு மொத்தமாக வெளி மாநிலத் தொழிலாளர்களை நம்பியிருக்கும் நிலைக்கு நமது ஊர் தொழில்கள் தள்ளப்பட்டால் உள்ளூர் தொழிலாளர்கள் பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு தொழிலாளர்கள் கூறினர்.