வடமாநில தொழிலாளி மர்மச்சாவு
பூதப்பாண்டி அருேக வடமாநில தொழிலாளி மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அழகியபாண்டியபுரம்,
பூதப்பாண்டி அருேக வடமாநில தொழிலாளி மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
வடமாநில தொழிலாளி
மேற்கு வங்காளம் மாநிலம் சாண்டல்பூர், பூர்பா பகுதியை சேர்ந்தவர் குர்ஹட்டிகிரி (வயது29), தொழிலாளி. இவர் பூதப்பாண்டி அருகே உள்ள திடல் தாடகை மலை அடிவாரத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். இவருடன் 12 வடமாநில தொழிலாளர்களும், சில உள்ளூர் தொழிலாளர்களும் வேலை செய்து வந்தனர். இவர்கள் அனைவரும் செங்கல்சூளை அருகே உள்ள அறைகளில் தங்கி இருந்தனர்.
கடந்த சனிக்கிழமை வேலை முடிந்தவுடன் உள்ளூர் தொழிலாளர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டனர். அதன்பின்பு வட மாநில தொழிலாளர்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்தனர்.
பிணமாக கிடந்தார்
நேற்று காலையில் உள்ளூர் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு வந்தனர். அப்போது, வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த அறையில் குர்ஹட்டிகிரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உள்ளூர் தொழிலாளர்கள் செங்கல்சூளை உரிமையாளர் பீட்டரிடம் தகவல் தெரிவித்தனர். அவர் பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர். பிணத்தின் கழுத்தில் சிறு, சிறு காயங்கள் இருந்தன. இதுதொடர்பாக வடமாநில தொழிலாளர்களிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால், தொழிலாளி சாவுக்கான காரணம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
கொலை செய்யப்பட்டாரா?
இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் குர்ஹட்டிகிரி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக அவருடன் தங்கியிருந்த 12 வடமாநில தொழிலாளர்களையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்புதான் சாவுக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். இறந்த வடமாநில தொழிலாளி குர்ஹட்டிகிரிக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.