வடமாநில தொழிலாளி கொரோனாவிற்கு பலி?
கரூரில் வடமாநில தொழிலாளி கொரோனாவிற்கு பலியானார். இதுகுறித்து சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமாநில தொழிலாளி
மேற்குவங்க மாநிலம் தெற்கு பர்கானாவை சேர்ந்தவர் சரத்குமண்டல் (வயது 52). இவர் கடந்த சில ஆண்டுகளாக கரூர் சின்ன ஆண்டாங்கோயில் பகுதியில் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.இந்நிலையில் சரத்குமண்டல் கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சுகாதாரத்துறையினர் விசாரணை
பிறகு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் மீண்டும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சரத்குமண்டல் மீண்டும் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். இருப்பினும் நேற்று முன்தினம் வீட்டில் பரிதாபமாக இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சரத்குமண்டல் கொரோனாவால் இறந்தாரா? என சுகாதாரத்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.