விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு வெகுமதி
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு வெகுமதியை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் வழங்கினார்.
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன் கலந்துகொண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 25.2.2023 அன்று நடந்த பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கில் தக்க புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்த போலீசார் ராஜ்குமார், பிரபாகரன், முருகன், வெங்கடேசன், குமரகுரு, பழனி, இளங்கோவன் ஆகியோரையும், கடலூர் மாவட்டத்தில் 7.6.2020 அன்று முத்தாண்டிக்குப்பம் பகுதியில் தனிமையில் வசித்த வயதான பெண்ணை தாக்கி அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்தவர்களை கைது செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல், ராஜேந்திரன், ஏட்டு பாலமுருகன், போலீசார் ஆனந்தன், ராஜூ ஆகியோரையும், கள்ளக்குறிச்சியில் கடந்த 19.4.2023 அன்று ஒரு பெண், 2 குழந்தைகள் என 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியசீலன், ஆனந்தராசு, திருமால், சிவச்சந்திரன், போலீஸ்காரர் சிவராமகிருஷ்ணன் ஆகியோரையும் பாராட்டி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஐ.ஜி.க்கள் பகலவன், முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்ரீநாதா, ராஜாராம், மோகன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.