வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆலோசனை
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.
செஞ்சி,
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், செஞ்சி தாலுகா பகுதியில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் செஞ்சி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
இதற்கு தாசில்தார் நெகருன்னிசா தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிக்குமார், செஞ்சி பேரூராட்சி மன்றதலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பருவமழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
பின்னர், வீட்டுமனை பட்டாக்கள் கேட்டு வந்த மனுக்கள் குறித்தும், பட்டா வழங்கிய விவரம் மற்றும் நிலுவையில் உள்ள விவரங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேட்டறிந்தார். அதேபோல் தகுதியானவர்களுக்கு முதியோர் உதவி தொகை வழங்குதல், ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கும் உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், தனி தாசில்தார்கள் பிரபு வெங்கடேசன், ரங்கநாதன், துணை தாசில்தார்கள் பாரதி, செல்வமூர்த்தி, வட்ட வழங்கல் அலுவலர் துரை செல்வன், வருவாய் ஆய்வாளர்கள் கண்ணன், பரமசிவம், பழனி, கார்திக் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.