வடகிழக்கு பருவமழை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். அதன்படி, அடுத்த மாதம் அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இது டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் விவசாயிகள் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர்.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும், மழையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை, தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார். மழைநீர் வடிகால் கட்டுமான பணி, வடிகால்களில் அடைப்புகளை அகற்றும் பணி, நீர்நிலைகள், கால்வாய்கள், அணைக்கட்டுகளின் கதவுகள், கரைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.