வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தயார்


வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தயார்
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் லலிதா கூறினார்..

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் லலிதா கூறினார்..

கட்டுப்பாட்டு அறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை நேற்று தொடங்கப்பட்டது. அதனை கலெக்டர் லலிதா பார்வையிட்டு, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த அக்டோபர் 31-ந் தேதி வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 105 மி.மீ மழை பதிவாகியுள்ளது. நமது மாவட்டத்தில் நவம்பர் 1, 2-ந்தேதிகளில் 117 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. நவம்பர் 5, 6 -ந் தேதிகளில் மழை தீவிரம் அடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்ததால், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும், குளங்களும் நிரம்பியுள்ளன. எனவே கரையோரங்களில் உள்ள பொதுமக்கள் ஏரி குளங்களுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும். ஆடு, மாடுகளை குளங்களுக்கு அருகாமையில் விடாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

ஒவ்வொரு வட்டத்திலும் துணை கலெக்டர்கள் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது 10 துறைகள் அடங்கிய ஒருங்கிணைந்த குழுவாகும். இந்த குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மீட்பு பணி, பராமரிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ளும். இப்பணிகளில் 125 அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் 15 புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் 346 பள்ளிகளில் பொதுமக்கள் தங்குவதற்கு சிறப்பு முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அனைத்து முகாமிலும் குடிநீர், பவர் ஜெனரேட்டர், அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பம்பு செட்டுகளும் தயார் நிலையில் உள்ளன. நீர்வளத்துறையின் சார்பில் 11 இடங்களில் 25 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன.

1 மணி நேரத்திற்குள் தீர்வு

நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளும் தயார் நிலையில் உள்ளன. போலீஸ் துறையின் சார்பில் பேரிடர் சம்பந்தமாக 9 குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தீயணைப்பு துறையின் சார்பில் சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையை 04364 -222588 என்ற தொலைபேசி எண்ணிலும், 9487544588 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். மேலும், 8148917588 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம். புகார் வரப்பெற்ற 1 மணி நேரத்திற்குள் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, இணை இயக்குனர் (வேளாண்மை) சேகர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், பேரிடர் மேலாண்மை தாசில்தார் இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story