வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது
புதுக்கோட்டையில் வடகிழக்கு பருவ மழை பெய்ய தொடங்கியது.
வடகிழக்கு பருவ மழை
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்தில் நிறைவடைது வழக்கம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நேற்று முதல் தொடங்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. புதுக்கோட்டையில் இன்று பகல் 1 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழையானது சிறிது தூறலாக பெய்தது. மதியம் 2 மணி வரை பெய்த நிலையில் வானில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டன. அதன்பின் மதியம் 3 மணி அளவில் வெயில் அடிக்க தொடங்கியது. இதேபோல மாவட்டத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து துறையினரும் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் மழை அதிகம்
புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த காலங்களில் வடகிழக்கு பருவ மழையின் போது அதிகம் மழை பெய்துள்ளது. மேலும் பருவத்திற்கு பின்னும் ஜனவரியில் மழை பெய்த காலங்களும் உண்டு. புதுக்கோட்டை மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை காலங்களில் கடந்த 2017-ம் ஆண்டு 4 ஆயிரத்து 927.1 மில்லி மீட்டர் அளவும், 2018-ம் ஆண்டு 8 ஆயிரத்து 578.12 மில்லி மீட்டர் அளவும், 2019-ம் ஆண்டு 11 ஆயிரத்து 909.33 மில்லி மீட்டர் அளவும், 2020-ம் ஆண்டு 11 ஆயிரத்து 68.37 மில்லி மீட்டர் அளவும், கடந்த 2021-ம் ஆண்டு 15 ஆயிரத்து 637 மில்லி மீட்டர் அளவும் மழை பெய்திருந்தது.
இந்த ஆண்டில் கடந்த 1-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை ஆயிரத்து 847.20 மில்லி மீட்டர் அளவும் மழை பெய்துள்ளது. பருவ மழை நேற்று முதல் தொடங்கி உள்ள நிலையில் வழக்கமான இயல்பை விட அதிகமாக பெய்ய வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழையையொட்டி நீர்நிலைப்பகுதிகளான ஏரி, குளங்கள், கண்மாய்களில் நீர்மட்டம் கணக்கிடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும் கல்லணை கால்வாய் பகுதிகளில் 170 குளங்களில் சுமார் 60 குளங்கள் தற்போதே 100 சதவீதம் நிரம்பி உள்ளன. இதனால் மழையினால் மேலும் நிரம்பி குளங்கள் எதுவும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.