போலீஸ் நிலையத்தில் வடமாநில இளம்பெண்கள் தஞ்சம்

அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக, வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த இளம்பெண்கள் புகார் அளித்தனர்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 16, 17 வயதான இளம்பெண்கள் 2 பேர் புரோக்கர் ஒருவர் மூலம் அழைத்து வரப்பட்டு, வேடசந்தூரில் சேணன்கோட்டை அருகே விடுதியில் தங்கியிருந்து நூற்பாலையில் பணிபுரிந்தனர். அங்கு பணியாற்ற தங்களுக்கு பிடிக்காததால் தங்களது சொந்த ஊருக்கு செல்வதாக புரோக்கரிடம் கூறினர். ஆனால் ஒடிசா செல்ல அவர்களை அனுமதிக்கவில்லை.
மேலும் இளம்பெண்களின் செல்போன் மற்றும் ஆதார் அட்டையை வாங்கி வைத்து கொண்டதுடன், ஒரு அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்கள் 2 பேரும் அந்த அறையில் இருந்து தப்பி வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதனையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அந்த பெண்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது, நூற்பாலையில் வேலை செய்ய விருப்பம் இல்லாத தங்களை அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக புகார் தெரிவித்தனர். இதற்கிடையே அந்த 2 பெண்களும் ஒடிசா மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.