வடமாநில தொழிலாளர்கள் நெல்லையில் தவிப்பு
கேபிள் பதிக்கும் பணிக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள் நெல்லையில் தவித்தனர். அவர்களை, போலீசார் மீட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கேபிள் பதிக்கும் பணிக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள் நெல்லையில் தவித்தனர். அவர்களை, போலீசார் மீட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.
வடமாநில தொழிலாளர்கள்
நெல்லை-சங்கரன்கோவில் ரோடு ராமையன்பட்டியில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நேற்று இரவு வடமாநிலத்தை சேர்ந்தவர்கள், குழந்தைகளுடன் தவித்துக் கொண்டிருந்தனர்.
இதுபற்றி கலெக்டர் கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவரது உத்தரவுப்படி மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் வந்தனர்.
அவர்கள் விசாரித்த போது, மராட்டிய மாநிலத்தை சேர்ந்த தொழிலாளிகள், பெண்கள், குழந்தைகள் என 19 பேர் வந்திருந்தது தெரியவந்தது. அவர்களை, பூமிக்கு அடியில் கேபிள் பதிப்பதற்காக குழி தோண்டும் பணிக்கு அழைத்து வந்ததும் தெரியவந்தது. மேலும் இங்கு உரிய ஏற்பாடுகள் செய்யாமலும், தொடர்பு இல்லாமல் போனதால் தவித்து வந்தது தெரியவந்தது.
19 பேர் மீட்பு
இதையடுத்து 19 பேரும் மீட்கப்பட்டு பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை அருகே உள்ள மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் அவர்களை அழைத்து வந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.